தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாகுவிடம் மனு அளிக்கும் தலைமைச்செயலக சங்க நிர்வாகிகள்
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாகுவிடம் மனு அளிக்கும் தலைமைச்செயலக சங்க நிர்வாகிகள்

தேர்தல் அதிகாரிகளுக்கு உணவு தர ஏற்பாடு செய்யுங்கள் - சத்தியப்ரதா சாகுவிடம் மனு!

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளைமறுநாள் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் அலுவலர்களுக்கு உணவை ஏற்பாடுசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலக சங்கச் செயலாளர் ஹரிசங்கர், இணைச்செயலாளர்கள் இரா. லெனின், ஜீவன், பொருளாளர் பிரபா ஆகியோர் தலைமைத்தேர்தல் அதிகாரி சத்தியப் பிரதா சாகுவை கோட்டையில் இன்று சந்தித்து மனு அளித்தனர். 

அம்மனுவில், “ தமிழ்நாட்டில் நடைபெற உள்ள தேர்தல் வாக்குப் பதிவு பணிகளில் 3 இலட்சத்திற்கும் மேலான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். குறிப்பாக வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் தேர்தல் பணியாளர்களுக்கு உணவுப்படியாக தேர்தல் ஆணையத்தினால் 18.04.2024, 19.04.2024 ஆகிய இரண்டு நாள்களுக்கு ரூ.150 வீதம் ரூ.300 வழங்கப்படுகிறது. இதில் தேர்தல் நாளான 19.04.2024 அன்று வாக்குச்சாவடி பணியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்குச் சாவடியினை விட்டு, காலை, மதிய உணவிற்காக எங்கும் வெளியில் செல்ல இயலாது.”என்றும், 

”கடந்த கால தேர்தல் அனுபவங்களில், பல்வேறு தருணங்களில் இவர்கள் உணவு உட்கொள்ளாமலேயே பணியாற்ற வேண்டிய கடுமையான சூழல் ஏற்பட்டுள்ளது. அதிலும், குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்கள் கடுமையான நெருக்கடியினை எதிர்கொள்கிறார்கள். தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கும் ஊர்க்காவல் படையினருக்கும் உரிய முறையில் உணவு ஏற்பாடு செய்து தரப்படுகிறது என்பதனை தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.” என்றும், 

எனவே, ”வாக்குச் சாவடியில் தேர்தல் பணியில் உள்ள அலுவலர்களுக்கு 19.04.2024 அன்று காலை மற்றும் மதியம் உணவு வழங்குவதற்கான ஏற்பாட்டினை செய்து தருவதற்கான தக்க ஆணைகளை அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்கும் வழங்கவேண்டும்.” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com