திருப்பரங்குன்றத்தில் 144 தடை... இன்றும் வழக்கு விசாரணை!

திருப்பரங்குன்றம் மலை
திருப்பரங்குன்றம் மலை
Published on

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் தீபத் தூணில்தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூண் (எல்லைக் கல் தூண்) என்ற இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி ராம ரவிக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், திருப்பரங்குன்றத்தில் இந்துத்துவா அமைப்பின் பெரும் எண்ணிக்கையில் நேற்று கூடினர். நீதிபதி சுவாமிநாதன் உத்தரவுப்படி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படக் கூடும் என எதிர்பார்த்த நிலையில் கார்த்திகை தீபமானது வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள மலையில் மட்டுமே நேற்று மாலை ஏற்றப்பட்டது; மேலும் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாது எனவும் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்துத்துவா அமைப்பினர் திருப்பரங்குன்றம் மலை மீது ஏற முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களைத் தடுத்தனர்.

முன்னதாக, தீபத் தூணில் தீபம் ஏற்ற உரிய ஏற்பாடுகளை அரசு செய்யவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் முன்பு மாலை 5 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் செயல் அலுவலரை நேரில் ஆஜராக நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் அவரை உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் வழக்கு விசாரணை மாலை 6.05 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் நடந்த விசாரணையில், மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றுவதற்கு முன்னரே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது சட்டவிரோதம் எனவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

அதில், தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் உத்தரவுக்கு எந்த நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை. அரசு தரப்பு கோரிக்கையை ஏற்றுதான் 6.05 மணி வரை வழக்கை ஒத்திவைத்தேன். அப்போது வரை நான் பிறப்பித்த உத்தரவுப்படி தீபத் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.

தற்போது உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் முன்பாக மேல்முறையீடு செய்திருப்பதாக தகவல் தந்துள்ளது ஏற்புடையது அல்ல. தீபத்தூணில் மனுதாரர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கார்த்திகை தீபம் ஏற்றலாம்.

தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவோருக்கு CISF (உயர்நீதிமன்ற பாதுகாப்பு பணி) படையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்தே 67 CISF வீரர்கள், திருப்பரங்குன்றம் சென்றனர். மனுதாரர் ராம ரவிக்குமார் உள்ளிட்டோர் CISF படையினருடன் மலை ஏற முயன்றனர். ஆனால் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதை சுட்டிக்காட்டி போலீசார் அனைவருக்கும் மலை ஏற அனுமதி மறுத்தனர். இதனால் திருப்பரங்குன்றத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதனிடையே நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவாவிடம் தமிழ்நாடு அரசு நேற்று மாலை மேல்முறையீடு செய்தது. அவரது உத்தரவின் பேரில் மதுரை உயர்நீதிமன்ற நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரனிடம் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனு மீது இன்று காலை விசாரணை நடைபெறும் என நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com