சீமான்
சீமான்

இஸ்லாமிய கைதிகள் விடுதலை: வாக்கு தந்துவிட்டு தாமதம் ஏன்? - சீமான்

நீண்ட நெடுங்காலமாகச் சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளை, அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு விடுதலைசெய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

நீண்ட நெடுங்காலமாகச் சிறையில் வாடும் இசுலாமியச் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி பல ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் எனும் கோரிக்கையை முழுமையாக ஆதரிப்பதாக இன்றைய அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

” மதிப்புமிக்க மானுட வாழ்வில் சிறை என்பது தவறிழைத்தவர்களைத் தண்டித்து, சீர்திருத்தி, புனர்வாழ்வு அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஓர் கட்டமைப்புதானே அன்றி, அவை வாழ்நாள் முழுமைக்கும் சமூக வாழ்வை மறுத்து வதைக்கும் வதைக்கூடங்கள் அல்ல. அவ்வகையில் சிறைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் இசுலாமிய மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதனாலேயே, அவர்களுக்கான சனநாயக உரிமையான விடுதலை எனும் வாய்ப்பை மறுப்பதென்பது அப்பட்டமான உரிமை பறிப்பாகும்.” ” என்றும்,

”தமிழ்நாட்டுச் சிறைகளில், இசுலாமியச் சிறைவாசிகளை எவ்வித விசாரணையுமின்றி, சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே நீண்ட காலமாக அடைத்து வைத்திருந்தது பெருந்துயரமென்றால், மறுபுறம், சட்டத்தின்படி இருக்கும் தார்மீக வாய்ப்புகளை முற்றாக மறுத்து, 20, 25 ஆண்டுகளென தங்களது வாழ்நாளின் பெரும்பகுதியைச் சிறையிலேயே கழித்து வரும் இசுலாமியத் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்ய விடாப்பிடியாய் மறுத்து, அவர்களை வதைத்து வரும் ஆளும் திராவிடக்கட்சிகளின் கொடுங்கோல்போக்கு சகித்துக் கொள்ளவே முடியாதப் பெருங்கொடுமை.” என்றும் சீமான் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

” 'வகுப்புவாத மோதல்களில் தொடர்புடையோரை விடுதலைசெய்ய மாட்டோம்' என அரசாணை வெளியிட்டு, இசுலாமியச் சிறைவாசிகளின் விடுதலைக்குக் கேடு விளைவித்த திமுக அரசு, எதிர்ப்பு வந்தவுடன் அதனை ஈடுகட்ட, விடுதலை குறித்து ஆராய்வதற்கெனக் கூறி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் குழு அமைத்தது. அக்குழு அமைக்கப்பட்டு ஏறக்குறைய இரண்டாண்டுகளாகியும் இன்றுவரை எவ்வித முன்நகர்வையும் செய்யாது, திமுக அரசு காலங்கடத்திக் கொண்டிருப்பது அப்பட்டமான சந்தர்ப்பவாதமாகும்.” என்றும் சீமான் சாடியுள்ளார்.

மேலும், ”வயது முதிர்வு மற்றும் உடற்பிணி காரணமாக தளர்ந்து வாழ்வின் இறுதி நாட்களையாவது தம் குடும்பத்தினருடன் வாழ்ந்திட வேண்டி கருணை அடிப்படையில் சிறைவிடுப்பு கேட்டு இசுலாமியச் சிறைவாசிகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவினைக்கூட தள்ளுபடி செய்யக்கோரி, திமுக அரசு பதில் மனு தாக்கல் செய்தது இசுலாமிய மக்களுக்குச் செய்த பச்சைத்துரோகம் இல்லையா?

'இசுலாமியர்கள் என்றாலே பயங்கரவாதிகள்' என முத்திரைக் குத்தி மதத்தின் பெயரால் மக்களைப் பிளந்து பிரித்து, வெறுப்பையும், வன்மத்தையும் வளர்க்கும் பாஜகவின் செயலுக்கும், 'இசுலாமியர் என்பதால், விடுதலை செய்ய முடியாது' என்கிற திமுகவின் மதப்பாகுபாட்டு நிலைப்பாட்டுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? பாஜகவை அடியொற்றி செல்கிறதா திமுக அரசு? அல்லது பாஜகவுக்குப் பயப்படுகிறதா?” என்றும் சீமான் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com