கூட்டணியா…? ‘விஷம் குடித்துவிட்டு படுத்துவிடலாம்!’ – சீமான் அதிருப்தி!

சீமான், விஜய்
சீமான், விஜய்
Published on

“தேர்தல் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமமானது. அதற்கு பேசாமல் விஷம் குடித்துவிட்டே படுத்துவிடலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது அரசியல் மாநாடு நேற்று விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் திரண்ட இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், செயல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இம்மாநாட்டில் பேசிய நடிகர் விஜய், பிளவுவாத சக்தியான பாஜகவும் ஊழல்வாதிகளான திமுகவும்தான் சித்தாந்த, அரசியல் எதிரிகள் என அறிவித்தார். மேலும் 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும். தவெக ஆட்சியில், அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு உண்டு எனவும் அறிவித்தார். அதேபோல திராவிடமும் தமிழ்த் தேசியமும் தங்களது இரு கண்கள் என்றார் விஜய்.

நடிகர் விஜய் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு சிறிய கட்சிகள், கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டன. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது முதலே வரவேற்று வரும் சீமான், நேற்றைய விஜய் பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் கூறுகையில், “தந்தை பெரியார் மட்டுமே பெண்ணுரிமைக்காக போராடவில்லை. வேலுநாச்சியார் போராடும் போது தந்தை பெரியாரே பிறக்கவில்லை. பாரதியாரைப் போல பெரியாரும் பெண் உரிமைக்காகப் போராடினார். அவ்வளவுதான். திராவிடமும் தமிழ்த் தேசியமும் தமது கண்கள் என்கிறார் விஜய். அவரது கட்சியின் கொள்கைகள் நாம் தமிழர் கட்சிக்கு ஒத்துவராதவை; எதிரானவை என்றார்.

மேலும் கூட்டணி என்பதே தற்கொலைக்கு சமமானது. கொள்கைகளில் உடன்பாடு இல்லாத போது எதற்காக கூட்டணி வைக்க வேண்டும்? கூட்டணி என முடிவெடுத்துவிட்டால் அது ஒவ்வொரு கட்சிக்கும் தற்கொலைக்கு சமமானதுதான். அதற்கு விஷம் குடித்துவிட்டு படுத்துவிடலாம். ஏன்? உங்க தனித்துவத்தை இழந்துவிடுவீர்கள். உங்க கூட்டணிக் கட்சித் தலைவர் கோபித்துக் கொள்வார் என நினைத்தால் நீங்கள் என்ன பேசுவீர்கள்? நீங்க செய்கிற தவறுகளுக்கு எல்லாம் நான் வக்காலத்து வாங்கி பேசனுமா? முட்டுக் கொடுக்கனுமா? அதை ஏற்பீர்களா நீங்கள்? கூட்டணி வைத்தால்தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்கிறீர்கள்.. கட்சியை காப்பாற்றுவதுதான் லட்சியம் என்றால் எந்த லட்சியத்தை காப்பாற்ற கட்சியை தொடங்குனீங்க? எனக்கு அதில் உடன்பாடு இல்லை..

கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிட்டு நான் தோற்றுதான் போகிறேன்.. உங்களுக்கு என்ன இழப்பு? என் முன்னோர்கள் செய்த தவறை நான் செய்யமாட்டேன்.. எங்க கட்சியை உருவாக்கிய சிபா ஆதித்தனார், மபொசி என எல்லா தமிழ்த் தேசிய அரசியல் முன்னோர்கள் எல்லாம் திராவிடத்தில்தான் கரைந்தனர். அந்த திராவிட பூதம் தின்று விழுங்கிவிட்டது. நான் ஒருத்தன்தான் திராவிடத்தை கொன்று புதைக்க வந்தவன். அப்ப என்னையாவது சுதந்திரமாக விடவேண்டும். என்னை ஏன் கூட்டணிக்கு போ என்கிறீர்கள்? இவ்வாறு சீமான் கூறினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com