சீமான்
சீமான்

அமைதியாக வந்து சென்ற கமல், சீமான்… ஆர்ப்பாட்டத்துடன் விஜய்!

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகியோர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

தமிழகம், புதுச்சேரியில் இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. முற்பகல் 11 மணி நிலவரப்படி 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

அரசியல் கட்சிகளின் தலைவர்களும் திரை பிரபலங்களும் தத்தம் சொந்தத் தொகுதிகளில் வாக்கு செலுத்திவருகின்றனர்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

அந்தவகையில், மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் முற்பகல் 11 மணிக்கு வாக்குசெலுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ எல்லாத் தேர்தலும் முக்கியமானதுதான். இந்தத் தேர்தல் எல்லா தேர்தலைவிடவும் முக்கியம் அதனால், எல்லோரும் நிச்சயம் வாக்களிக்க வேண்டும். இந்தியா வாழ்க! தமிழ்நாட்டு ஓங்குக, தமிழ் வெல்க!” என்றார்.

இதைப்போல, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், சென்னை நீலாங்கரை கபாளீஸ்வரர் நகர் அரசுப் பள்ளியில் உள்ள வாக்குச்சவடியில் வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவிட்டுச் செல்கின்றனர். இந்த ஆர்வத்தைப் பார்க்கும்போது உறுதியாக ஒரு மாற்றம் வரும் என நம்புகிறேன். ஜனநாயகக் கடைமையின்படி அனைவரும் வந்து ஓட்டுப் போட வேண்டும். நாம் ஓட்டுப் போடாவிட்டால் என்ன ஆகிவிடப் போகிறது என்ற எண்ணத்தைக் கைவிடுங்கள். நாம் வாழும் நாட்டுக்குச் செய்யும் மிகப் பெரிய ஜனநாயகக் கடமை ஓட்டுப் போடுவதுதான்." என்று சீமான் கூறினார்.

வாக்களிக்க வந்த விஜய்
வாக்களிக்க வந்த விஜய்

மதியம் 12 மணிக்கு மேல், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய், நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். முன்னதாக, அவர் வீட்டிலிருந்து வாக்களிக்கப் புறப்பட்டபோது அந்தப் பகுதியில் ஒரே கூச்சலாக இருந்தது. அவரின் வாகனத்தைத் தொடர்ந்து பல வாகனங்களும் முன்னரும் பின்னரும் கேமராக்களுடன் இருசக்கர வாகனங்களும் சென்றதால், அப்பகுதி மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். அவரைப் படம்பிடிப்பதில் செய்தி நிறுவனங்களின் ஊடகத்தினர் சிலரே சிரமப்பட்டனர். விஜய் வந்துசென்றதில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் திக்குமுக்காடிப் போனார்கள்.

logo
Andhimazhai
www.andhimazhai.com