முதலமைச்சர் விஜய் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரணத்திற்கு மன்னிப்பு கேட்கப்போகிறாரா அல்லது நீதிப்பெற்றுத்தரப்போகிறாரா என்று நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தனது சமூக ஊடகப்பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளதாவது:
"மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காகச் சென்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாரவுந்து ஓட்டுநர் பாலகிருஷ்ணன் அவர்கள் காவல் நிலையத்திற்குள்ளேயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.
விசாரணைக்காக காவல்நிலையம் சென்ற எளிய மனிதர் உயிரோடு வீடு திரும்ப முடியாத கொடுமை நிகழ்ந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
காவல் நிலையம் என்பது மக்களின் குறைகளைத் தீர்க்கும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களின் உயிரைப் பறிக்கும் இடமாக மாறிவிடக்கூடாது! மக்களின் உயிரைப் பாதுகாக்க முடியாத காவல்துறையால் சட்டம்-ஒழுங்கை எப்படிப் பாதுகாக்க முடியும்?
தான் ஓட்டிச் சென்ற வாகனம் தீப்பிடித்து எரிந்தது தொடர்பான விசாரணைக்காகக் காவல் நிலையம் சென்ற பாலகிருஷ்ணன் அவர்கள், காவல் நிலையக் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை கூறுவது பல்வேறு ஐயங்களை எழுப்புகிறது. விசாரணைக்குச் சென்றவரை இரவு முழுவதும் காவல் நிலையத்தில் தங்க வைத்தது ஏன்? காவல்துறையின் கண்காணிப்பில் இருந்த ஒருவர் காவல் நிலையத்திற்குள்ளேயே உயிரிழக்கும் அளவிற்கு என்ன நடந்தது? அவரது உயிரைப் பாதுகாக்கத் தவறியது யார்? இக்கேள்விகளுக்கெல்லாம் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டாமா?
கடந்த தி.மு.க. ஆட்சியில் திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல்துறையினரால் கொல்லப்பட்டபோது, அவரது தாயாரிடம் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மன்னிப்புக் கேட்டதை விமர்சித்து, அஜித்குமார் குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதுமா? என்று கேள்வி எழுப்பி 'சாரி வேண்டாம்; நீதி வேண்டும்' என்ற இன்றைய முதலமைச்சர் விஜய், இன்று தம்முடைய ஆட்சியில் காவல் நிலையத்திற்குள்ளேயே ஓர் உயிர் பறிபோயிருப்பதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? பாலகிருஷ்ணன் மரணத்திற்குஎன்ன நீதியை பெற்றுத்தரப்போகிறார்?
ஆட்சி மாறினாலும் காவல் நிலைய மரணங்கள் மட்டும் மாறாமல் தொடர்வதுதான் நீங்கள் சொன்ன ஆட்சி மாற்றமா?
ஒவ்வொரு நாளும் வெவ்வேறு குற்றங்களில் சிக்கும் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அறிவுரையோடு அனுப்பிவைக்கும் முதலமைச்சர் விஜய் அவர்கள், இந்தக் காவல் நிலைய மரணத்திற்கு காரணமான காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்ததோடு கடமை முடிந்துவிட்டதாகக் கருதக்கூடாது.
பாலகிருஷ்ணன் காவல் நிலைய மரண வழக்கு விசாரணை எவ்வித அரசியல் தலையீடுமின்றி நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும். காவல் நிலையக் கண்காணிப்பு பதிவுகள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதோடு, நீதித்துறை விசாரணையின் மூலம் பாலகிருஷ்ணன் மரணத்தில் உள்ள அனைத்து ஐயங்களுக்கும் விடை காணப்பட்டு அவரது குடும்பத்தினருக்கு உண்மை தெரியப்படுத்தப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்து, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
மேலும், குடும்பத்தின் வாழ்வாதாரமாக விளங்கிய பாலகிருஷ்ணனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு உரிய துயர்துடைப்பு நிதி வழங்குவதோடு, குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று சீமான் வலியுறுத்துயுள்ளார்.