சீமான்
சீமான்

அ.தி.மு.க. ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிடாதது ஏன்? – சீமான் கேள்வி

தி.மு.க.வின் ஊழல் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை அ.தி.மு.க.வின் ஊழல் பட்டியலை இதுவரை ஏன் வெளியிடவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நா.த.க.வின் உட்கட்சி ஆலோசனைக்காக பொள்ளாச்சிக்குச் சென்றிருந்த அவர், கோவை விமானநிலையத்தில் நேற்றிரவு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, உதயநிதியின் தலைக்கு ஒரு சாமியார் விலை வைத்திருக்கிறாரே என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், “ராமர் பாலம் கட்டிய ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்... இந்துக்கள் என்றால் திருடர்கள் என்று கருணாநிதி முன்னர் கூறியபோது, அவரின் நாக்கை அறுப்பதற்குப் பரிசு என்று அறிவித்தவர்கள் வட இந்திய சாமியார்கள். அதுபோலத்தான் உதயநிதி விவகாரத்திலும்... சாமியார் இப்படியெல்லாம் பேசலாமா? தலையை வெட்டிவிட்டு வா என்று சொல்வது ரவுடி, பொறுக்கி... நீ எப்படி சாமியாராக இருக்கமுடியும்? ஒருவர் சொல்கிற கருத்து பிடிக்கவில்லை என்றால், கருத்தை கருத்தால் எதிர்கொள்ளவேண்டும்.” என்றார்.

மேலும், “சனாதனம் என்றால் என்னவென்று விளக்கிப் பேசுவதற்கு யாராவது இருக்கிறார்களா? பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு காட்டுவதை என்னவென்று சொல்வது! நாம் எந்த நூற்றாண்டில் வாழ்கிறோம்...” என்று வேதனையான குரலில் கேள்விகளை எழுப்பினார்.

”நீங்கள் பயந்துவிட்டதாக அண்ணாமலை கூறுகிறாரே” என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, “என் பரம்பரைக்கே பயம் கிடையாது. பயப்படும் ஆள் மாதிரியா தெரிகிறேன். அவர் சொல்வார் நான் பயந்துட்டேன் என்று. கடந்த பதிமூன்று ஆண்டுகளாக வழக்கு, பிரச்னைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எத்தனை முறை சிறை சென்று வந்திருக்கிறேன். அண்ணாமலை சிறை சென்றிருக்கிறாரா? ஒரு வழக்காவது அவர் மீது இருக்கிறதா? என் மீது 128 வழக்குகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் இருக்கிற அரசியல் தலைவர்களில் என் அளவுக்கு வழக்கு வைத்திருப்பவரைச் சொல்லுங்கள்.” என்று சீமான் கூறினார்.

மேலும், ”அண்ணாமலை தி.மு.க.வின் பட்டியலை வெளியிட்டார். ஏன் அ.தி.மு.க.வின் ஊழல் பட்டியலை அவர் வெளியிடவில்லை? அப்படியென்றால், அண்ணாமலை பயப்படுகிறார் என்று அர்த்தமா? கூட்டணியைவிட்டு கழட்டி விட்டுவிடுவார்கள் என்று பயப்படுகிறாரா?” என்றார் அவர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com