108 ஆம்புலன்ஸ் சேவை- சீமான் அடுக்கும் புகார்கள்!
108 அவசர ஊர்தி ஊழியர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட அதனை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.
அறிக்கை ஒன்றில் இதை வலியுறுத்தியுள்ள அவர், “இந்திய அரசால் கடந்த 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 108 அவசர ஊர்தி சேவை தமிழ்நாட்டில் 2008ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. ஆண்டுதோறும் பல நூறு கோடி ரூபாய் மக்களின் நிதியை வழங்கி தமிழ்நாடு அரசு ஆந்திராவைச் சேர்ந்த EMRI Green Health Service என்ற நிறுவனத்தின் மூலம் அவசர ஊர்தி சேவையை வழங்கி வருகிறது. தொடக்கத்தில் நிரந்தரப் பணியாளர்களாகத் தொழிலாளர்களை வேலைக்கு எடுத்த அந்நிறுவனம், தற்போது ஓராண்டு ஒப்பந்த பணியாக மாற்றி, ஒவ்வொரு ஆண்டும் அதனைப் புதுப்பித்தல் செய்து வருகிறது.” என்று கூறியுள்ளார்.
”இயற்கைப் பேரிடர் காலங்களிலும், விபத்து, நோய்த்தொற்று முதலிய அசாதாரண சூழல்களிலும், பேராபத்திலுள்ள சக மனித உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியில் வாகன ஓட்டுநர், மருத்துவ உதவியாளர், தகவல் அறிவிப்பாளர் முதலிய பணிகளுக்காகக் கடந்த 15 ஆண்டுகளாக 6000-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் இரவு-பகல் பாராது தன்னலமற்று பணியாற்றி வருகின்றனர். ஆனால், அதை நிர்வகிக்கும் தனியார் நிறுவனமோ தமிழ்நாடு அரசிடம் பல நூறு கோடிகளைப் பெற்றுக்கொண்டு வழங்கும் ஓராண்டு ஒப்பந்தப் பணி காரணமாக, அவசர ஊர்தி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, ஊக்கத்தொகை, ஈட்டிய விடுப்பு, ஓய்வூதியம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் எதுவும் வழங்காமல் அவர்களைக் கொத்தடிமைகள் போல நடத்தி வருகிறது.” என விவரித்துள்ள சீமான்,
”ஒவ்வொரு நாளும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து 14 மணி நேரம்வரை, பணியாற்றும் அவசர ஊர்தி ஊழியர்களுக்கு முறையான அகவிலைப்படிகூட வழங்கப்படவில்லை என்பது பெருங்கொடுமை.” என்று குறிப்பிட்டுள்ளார்.
”தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் எவ்வளவு ஊதியம் ஊழியர்களுக்கு உயர்த்தி வழங்கப்படுகிறது என்பதை வெளிப்படையாக அந்நிறுவனம் தெரிவிப்பதில்லை. படைவீரர்களுக்கு இணையாகப் பணிபுரியும் அவசர ஊர்தி ஓட்டுநர்கள் பணியின்போது விபத்துக்குள்ளாகி இறந்துவிட்டால் அவர்களது குடும்பத்திற்கு அரசோ, நிறுவனமோ எவ்வித இழப்பீடும் வழங்குவதில்லை என்பதுதான் கொடுமைகளின் உச்சம். இதனால் உயிரிழந்த அவசர ஊர்தி ஓட்டுநர்களது குடும்பத்தின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது. அவசர ஊர்தி சேவையில் நடைபெறும் முறைகேடுகள் காரணமாகவே தங்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட வழங்கப்படுவதில்லை என அதில் பணியாற்றும் ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.” என்றும் சீமான் கூறியுள்ளார்.
”அவசர ஊர்தி சேவைக்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ஒதுக்கும் பலநூறு கோடி ரூபாய்கள் எங்கே செல்கிறது? அதில் முறைகேடு செய்வது ஆட்சியாளர்களா? அல்லது தனியார் நிறுவனமா? மக்களின் உயிரைக்கொல்லும் மதுக்கடைகளை நடத்த முடிந்த திமுக அரசால், மக்களின் உயிர்காக்கும் அவசர ஊர்தி சேவையை நடத்த முடியாதா? எல்லாவற்றையும் தனியாரிடமே ஒப்படைக்க எதற்கு அரசு? எதற்கு இத்தனை அமைச்சர்கள்? எதற்கு இத்தனை அதிகாரிகள்? மக்களிடம் வரி வாங்குவது மட்டும்தான் அரசின் வேலையா? எல்லாவற்றையும் தனியார் நிறுவனங்களே நடத்துமென்றால், தனியார் நிறுவனங்களால் மட்டும்தான் மக்களுக்குத் தரமான சேவை வழங்க முடியுமென்றால், மக்கள் எதற்கு வாக்களித்து ஓர் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?” என கேள்விகளை அடுக்கியுள்ள அவர்,
”ஒரு நல்ல தனியார் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தாலே போதுமே? ஆகவே, 108 அவசர ஊர்தி சேவையில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுத்திட, தமிழ்நாடு அரசே அதனை ஏற்று நடத்த வேண்டும். மேலும், அவசர ஊர்தி சேவையில் தன்னலமற்று பணியாற்றும் ஊழியர்களின் உழைப்பினை உறிஞ்சும் கொடுஞ்செயலை இனியேனும் கைவிட்டு, அவர்களை நிரந்தரப் பணியாளர்களாக்கி அரசு ஊழியர்களுக்கு இணையான அடிப்படை உரிமைகள் அனைத்தும் முறையாக வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.” என்றும் சீமான் கூறியுள்ளார்.