“சீமானின் கொள்கை பிடிவாதம் வியத்தலுக்குரியவை..”
பின்பற்றும் கொள்கையில் சீமான் காட்டும் பிடிமானமும் பிடிவாதமும் வியத்தலுக்குரியவை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 59ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சீமானுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: “எப்போதும் அண்மையில் இருக்கும் இளைய சகோதரர் சீமான், பிறந்த பிரதேசமானாலும் சரி, தேர்ந்துகொண்ட திரைத்துறையானாலும் சரி பக்கத்திலேயே பயணம் செய்பவர். பின்பற்றும் கொள்கையில் இவர் காட்டும் பிடிமானமும் பிடிவாதமும் வியத்தலுக்குரியவை. தான் தோன்றுவது எந்த அரங்காக இருந்தாலும் அதில் புகழொடு தோன்றும் பண்பும் திறனும் மிக்க அன்புத் தம்பி, நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர், செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். இந்நாளில் அவரை அணைத்து வாழ்த்துவது எனக்கு மகிழ்ச்சி. நீடு வாழ்க இளவல்.” இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

