“வாயிலேயே வடை சுடும் விஜய்…!”

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ
Published on

தவெக தலைவர் விஜய் வாயிலேயே வடை சுடுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (ஜனவரி 26) மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “விஜய் ஏதோ அரசியலுக்கு வருகிறார், வரட்டும் என நாங்கள் நினைத்தோம். நான் அவரை வரவேற்றேன். ஆனால் எங்கள் காதையே கடித்தால் நாங்கள் சும்மா இருப்போமா? கரூரில் 41 பேர் இறந்துவிட்டார்கள். லட்சக்கணக்கான மக்கள் கூடினாலும் ரசிகர்களைக் கட்டுப்படுத்த முடிகிறதா?

உலகில் எங்கும் இல்லாத வகையில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு போன் போட்டு “வீட்டுக்கு வாருங்கள்” என்று கூப்பிட்ட காட்சி தமிழகத்தில் புதியது. இதுதான் விஜய் செய்த புதிய திட்டம். இது மோசமான கலாச்சாரம்.

அவரைப் பார்க்க வந்த பிஞ்சுக் குழந்தைகள், பெண்கள் இறந்துவிட்டார்கள். அவர்கள் குடும்பத்திற்குப் போய் ஆறுதல் சொல்ல முடியவில்லை. அரசியல் இயக்கம் தொடங்கிவிட்டு, நீ அறையிலேயே உட்கார்ந்து அரசியல் செய்தால் என்ன அர்த்தம்.

அவர் நடிகர் என்ற இமேஜை வைத்துக்கொண்டு அப்படியே போய் ஓட்டு வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார். அரசியல் இயக்கம் தொடங்கிவிட்டால் களத்தில் வந்து பணியாற்ற வேண்டும். மக்களுக்கான நன்மை, தீமைகளில் கலந்துகொள்ள வேண்டும். விஜய் இப்போதுதான் வந்தார்; மக்களுக்காக எப்படி வேலை பார்க்கிறார் என்று மக்கள் பேச வேண்டும் என்றார்.

மேலும், “வீட்டில் ஒரு ஓட்டு வைத்துக்கொண்டுதான் கட்சியைத் தொடங்கியுள்ளோம்” என்று விஜய் பேசியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, வாயிலேயே அல்வா கொடுப்பார்கள். விஜய் வாயிலேயே வடை சுடுகிறார். எந்த வீட்டில் ஓட்டு இருக்கிறது? எத்தனை வீட்டிற்கு விஜய் போய்ப் பார்த்தார்? எப்படி கணக்கெடுத்தார்? விஜய் நடிகர் என்ற முகத்தை வைத்து வெற்றி பெற்றுவிடலாம் என நினைக்கிறார். நடிகர் என்பதால்தான் கூட்டம் கூடுகிறது. நடிகர் என்ற முகம் மட்டுமே எடப்பாடிக்கு இல்லையே தவிர, மக்கள் எங்களுக்காகக் கூடுகிறார்கள். விஜய் அறையில் அமர்ந்து அரசியல் செய்கிறார். களத்தில் வேலை செய்யவில்லை. சும்மா சொல்லிப் பில்டப் செய்கிறார்.” என காட்டமாக விமர்சித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com