
அ.தி.மு.க.விலிருந்து தன்னை கட்சி விதிமுறைப்படி நீக்கவில்லை என்றும் தான் கட்சியிலேயே தொடர்வதாகவும் இதை எதிர்த்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் இன்று முற்பகல் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதைத் தெரிவித்தார்.
அங்கு அவர் கூறியது :
“ 1975-ல் கோவையில் நடைபெற்ற அ.தி.மு.க. முதல் பொதுக்குழுவின்போது அதில் அரங்கநாயகம், மணிமாறன் ஆகியோரோடு எனக்கும் முழுமையாகப் பணியாற்றும் வாய்ப்பை வழங்கினார். அதன் பிறகு ஜெயலலிதாவின் வழியில் இந்த இயக்கத்துக்காக தடம் புரளாமல் என் பணியை ஆற்றியிருக்கிறேன். இதை ஜெயலலிதாவே எடுத்துச் சொல்லி இருக்கிறார். ’இமயமே தலையில் விழுகிறது என்றாலும் அலுக்காமல் இந்த இயக்கத்துக்கு விசுவாசமான தொண்டனாக இருப்பதால்தான் இத்தனை பொறுப்புகளை அவருக்கு வழங்கி இருக்கிறேன்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
2 முறை வாய்ப்புகள்
எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரின் காலத்திலும் இந்த இயக்கம் வலிமையோடு இருக்க வேண்டும் என்பதற்காக எல்லோரோடும் சேர்ந்து பணியை ஆற்றியிருக்கிறேன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, இந்த இயக்கம் உடைந்துவிடாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இரண்டு முறைகள் எனக்கு வாய்ப்புகள் கிடைத்தபோதுகூட அந்த வாய்ப்பை விட்டுக் கொடுத்திருக்கிறேன் என்பதை நாடறியும்.
பரிந்துரைக் கடிதம்
பொதுச் செயலாளராக எடப்பாடிபழனிசாமி பொறுப்பேற்றபிரகு, 2019, 2021, மாநகரம், பேரூராட்சி, நகராட்சி, 2024 தேர்தல்களில் அவர் எடுத்த முடிவால் கட்சி வெற்றி வாய்ப்பை இழந்தது. எம்ஜிஆரின் வரலாற்றில் தோல்வி என்பதே இல்லை. ஜெயலலிதா ஒரு முறை தோல்வி ஏற்பட்டால் பிறகு சரித்திரம் காணும் அளவுக்கு வெற்றியை உருவாக்குபவர். அவரின் மறைவுக்கு பிறகு இந்த இயக்கத்தை வழிநடத்த, அன்று திருமதி சசிகலா அவர்கள் எல்லோரையும் அழைத்து பேசி, என்னிடம் மணி நேரம் பேசிய பிறகு நானே சொன்ன ஒரே கருத்து, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும். நாம் இருப்பது 122 பேர்தான் 11 பேர் வெளியே இருக்கிறார்கள்; அந்த நிலை மாறிவிடக்கூடாது என்று சொன்னேன். அன்று இவருக்காகப் பரிந்துரைக் கடிதத்தை எல்லோரிடமும் ஒப்புதல் பெற்று பத்திரிகையாளர்களிடம் படித்துக் காட்டியவன் நான்.
தோற்றுப்போனதால் எடுத்த முடிவு
அப்படி இருக்கும்போது 4 ஆண்டு ஆட்சியை நடத்தினோம். அதன் பிறகு எந்த தேர்தலிலும் இவர் வெற்றியை பெற்றுத் தராத சூழலில்தான் 2024-ம் ஆண்டுக்கு பிறகு நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு நாம் செய்யவேண்டும் என்பதை அறிந்து, வெளியே சென்றவர்கள், மன வேதனையோடு தங்கள் பணிகளை ஆற்றாமல் துயரத்தோடு இருக்கும் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்றுதான் 6 பேர் சேர்ந்து எங்கள் கருத்துகளை வெளிப்படுத்தினோம்.
சந்தித்தோம், இல்லை என்றார்!
ஆனால் அப்படி எங்கள் கருத்துகளை வெளிப்படுத்திய பிறகு சுமார் 4 மாதங்கள் பத்திரிகைகளில் இதுபற்றிய செய்திகள் வந்தன. 6 பேர் சந்தித்தார்கள்; கருத்துகளை அவர் ஏற்கவில்லை என்று செய்திகள் வந்தன. அதன் பிறகு செய்தியாளர் கேட்டபோது யாரும் என்னை சந்திக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பெயர் சொல்ல விரும்பவில்லை!
இயக்கம் என்பது பல கோடி தொண்டர்கள் நிறைந்தது. தொண்டர்களின் எதிர்பார்ப்பைத்தான் நாங்கள் சொன்னோம். இன்று சோர்வோடு இருப்பவர்களையும் அரவணைத்தால்தான் வெற்றி கிடைக்கும் என்பதை உணர்ந்துதான் அதன் பிறகு 2 முரை அவரைச் சந்திக்கின்றபோது இந்தக் கருத்துகளை வலியுறுத்தினேன். அப்போது சிலர் என்னுடன் வந்தார்கள். அவர்கள் பெயரைச் சொல்ல விரும்பவில்லை.
என் கருத்துகளை அவர் ஏற்கவில்லை என்ற பிறகுதான் 5-ம் தேதியன்று மனம் திறந்து பேசுகிறேன் என்று என் கருத்துகளை நான் உங்களிடத்திலே சொன்னேன். யாராது வெளிப்படையாகப் பேச வேண்டும் என்பதால்தான் நான் பேசினேன்.
10 நாள்கள் கெடுவா, பேச்சா?
2026-க்குப் பிறகு நாம் வெற்றிபெற இயலவில்லை என்றால், அதற்கான காரணத்தை முன்னரே ஏன் சொல்லவில்லை என்ற கேள்வி எழும் என்பதால்தான் கருத்துகளைக் கூறினேன். ஆனால் அப்படிப் பரிமாறியபோது, 10 நாட்களில் பேச்சு தொடங்க வேண்டும் என்றேன். அப்போது நீங்கள்(ஊடகத்தவர்) நான் கெடு விதிக்கிறேனா என்று கேட்டீர்கள். “இது கெடுவல்ல. 10 நாட்களுக்குள் பேச்சை தொடங்க வேண்டும். ஒருமாதம் முதல் ஒன்றரை மாதம் வரை எடுத்துக் கொள்ளலாம். யாரைச் சேர்த்துக்கொள்ளலாம் என்பதை பொதுச் செயலாளர் முடிவு செய்யலாம்” என நான் சொன்னேன். அந்த ஆடியோவைக் கேட்டாலே தெரியும். ஆனால் செய்திகளில் நான் கெடு விதித்ததாக வந்தது.
தொடர் தோல்வி
2024 தேர்தலிலே நமக்கு படுதோல்வி ஏற்பட்டது. 10 தொகுதிகளில் 2ஆவது 3ஆவது இடம் பிடித்தோம். 2 தொகுதிகளில் 4-வது இடத்தை பிடித்தோம். நம்முடைய இயக்கத்தை எப்படி வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் கருத்துகள் பரிமாறப்பட்டன.
மீண்டும் அதிமுக புத்துயிர் பெற்று தமிழகத்தில் நல்லாட்சி நடக்க வேண்டும், எம்ஜிஆர் கண்ட கனவு நிறைவேற வேண்டும், புரட்சித் தலைவி நூற்றாண்டு காலம் இந்த இயக்கம் வலிமையோடு இருக்கும் என்று குறிப்பிட்டாரே, அதற்கு ஏற்ப என் கருத்துகளை வெளிப்படுத்தினேன்.
பதவிநீக்கம்
அதன் பிறகு அடுத்த நாள் என்னை அனைத்துப் பதவிகளில் இருந்தும் நீக்கினார்கள். உறுப்பினரைத் தவிர. அதன்பிறகு நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் தேர்தல் நடைபெற்ற போதும் வேட்பாளர்களைப் பரிந்துரை செய்த நால்வரில் நான் ஒருவராக இருந்திருக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை இந்த இயக்கம் வலிமையாக இருக்க வேண்டும். அந்த நோக்கத்தோடுதான் என் கருத்துகளை தெரிவித்தேன்.
குமரி இடைத்தேர்தல்
கன்னியாகுமரி இடைத்தேர்தலில் 5,126 வாக்குகல்தான் பெற்றோம். 2 லட்சத்துக்குமேல் வாக்குகளை பெற்ற கட்சி இப்படி குறைந்த வாக்குகளைப் பெறுகிறதே என்றுதான் என் கருத்துகளைச் சொன்னேன்.
நேற்று முன்தினம் தேவர் ஜெயந்திக்கு செல்லும்போது எல்லோரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைவரிடமும் பேசினேன். அவர்கள் சில கருத்துகளைச் சொன்னபோது அந்தக் கருத்துகளுக்கு மாறாக, இந்த இயக்கம் ஒன்றிணைய வேண்டும்; இந்த இயக்கம் வலிமையாக இருக்க எல்லோரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கோரி நான் எனது பணிகளை ஆற்றினேன்.
தேவர் ஜெயந்திப் பரிசு
அந்த பணிகளை ஆற்றுகிறபோது, தேவர் ஜெயந்திக்குச் சென்று அவருக்கு மரியாதை செலுத்தி, தேவர் திருமகனார் பூஜையிலே கலந்துகொண்டதற்கு எனக்கு கிடைத்த பரிசுதான் இந்த நீக்கம். ஒரு தியாகம் செய்து தேசியத் தலைவராக எல்லோராலும் நேசிக்கப்படுகிற ஒரு தலைவரின் விழாவில் கலந்துகொண்டு நீக்கப்பட்டவர்களுடன் பேசியது உண்மை. இயக்கத்துக்கு வலிமை சேர்க்க ஒத்துழைப்பு தரவேண்டும் என்று அவர்களிடத்திலே பேசி இருக்கிறேன். நான் அதை மறுக்கவில்லை.
அவர் ஏ-1!
ஆனால் நான் திமுகவுக்கு நான் உறுதுணையாக இருக்கிரேன் என்றும் பி டீம் என்றும் சொல்லியிருக்கிறார். பி டீம் யார் என்பதை நாடறியும். கொடநாடு வழக்குக்கு நாம் ஏன் இன்றுவரை குரல் கொடுக்கவில்லை?
நான் சாதாரண பொறுப்பாளர். இந்த இயக்கத்தை வளர்த்தவர், நாம் தெய்வமாக நேசித்த அம்மாவின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி பல்வேறு கொலைகள் பற்றி ஏன் குரல் கொடுக்கவில்லை என்பது தொண்டர்களின் கருத்தாக உள்ளது. என்னைப் பொறுத்தவரை நான் பி டீமில் இல்லை. ஏ 1-ல் அவர் இருக்கிறார். அதுதான் உண்மை.
இன்றுவரை அவர் மீது திமுக ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருக்கிறது? சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓபிஎஸ்ஸை நீக்க எடப்பாடி தீர்மானம்கொடுத்தபோது 10 நிமிடத்தில் சபாநாயகர் அதை அறிவித்தார். ஆனால் அதற்கு முன் பலமுறை முயன்றும் அதிமுகவின் கருத்துகளை வெளிப்படுத்த முடியவில்லை, ஏ 1-ஆக அவர் இருக்கிறார். பி டீமாக நாங்கள் இல்லை.
வேதனை
இன்னை இயக்கத்திலிருந்து நீக்கியதற்காக வேதனைப்படுகிறேன். வருத்தப்படுகிறேன். கண்ணீர் சிந்துகிறேன். இந்த இயக்கத்துக்காக 53 ஆண்டுகள் நான் பணியாற்றியுள்ளேன். தலைவர் காலத்தில் முதல் முறையாக செயலாளராக இருந்து பணியாற்றியவன், எனக்கு இந்த முடிவு வேதனை அளிக்கிறது. இரவு முழுவதும் நான் தூங்கவில்லை.
இவருக்கு முன்னரே!
இவர் பொறுப்புக்கு வரும்முன்னரே எம்ஜிஆரால் சட்டமன்ற உறுப்பினராக, மாவட்டச் செயலாளராக பணியாற்றி இருக்கிறேன். இவர் 1989 சட்டமன்றத்தில்தான் இடம்பெற்றார். நான் சீனியர். 9 முறை சட்டமன்ற உறுப்பினர். எனக்கு அவர் நோட்டீஸ் அனுப்பி இருக்க வேண்டும். அப்படி இடம்பெற்றவர் எனக்கு ஒரு நோட்டீஸாவது அனுப்பி இருக்க வேண்டும். இதுதான் விதியின் அடிப்படையில் இருக்கிறது. அந்த விதியை மீறி சர்வாதிகார போக்கில் என்னை நீக்கி இருக்கிறார்கள். இது வேதனை அளிக்கிறது.
ஒரு விதியை கொண்டுவந்தார், எம்ஜிஆர். அ.தி.மு.க. தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த விதியை யாரும் மாற்றக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். தொண்டர்களின் உணர்வைத்தான் நான் வெளிப்படுத்தி இருக்கிறேன்.
அந்தியூர் துரோகம்!
அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில் நான் துரோகம் செய்ததாகக் குறிப்பிட்டார் அதற்கான விளக்கத்தை அந்தியூரில் கழக வேட்பாளராக போட்டியிட்ட சண்முகவேலின் மகன் வெளியிட இருக்கிறார். அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.
1989-ல் நான் மாவட்டச் செயலாளராக இருந்தபோது சேவல் சின்னத்தில் அந்தியூரில் வென்றோம். ஆனால் கடந்த முறை நான் அந்தத் தொகுதிக்கான பொறுப்பில் இல்லை. என்னைக் குற்றம்சாட்டும்முன் அந்தக் குற்றத்தைச் செய்தது யார் என்பதைத் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். அதைவிட்டு விட்டு குற்றம்செய்தவர்களுக்கே பதவியைக் கொடுத்த விஷயம் இன்று எல்லோருக்கும் தெரியும்.
ஆட்சிக்கு உதவிய பா.ஜ.க.
அதிமுக ஆட்சியை 4 ஆண்டுகள் தொடர உதவி செய்தது பாஜக. ஆனால் 2024-ல் பாரத பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் பாஜக தடுமாறிக்கொண்டு இருந்தபோது நாங்கள் பாஜக கூட்டணியில் இல்லை என்று சொன்னவர் எடப்பாடி. அவர் ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வொன்றைப் பேசுகிறார். துரோகத்துக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் எடப்பாடிக்குதான் கொடுக்க வேண்டும்.
நாம் பொறுப்பில் இருக்கும்போது எதையும் வெளிப்படையாகப் பேசக்கூடாது என்பதால் நான் இதுபற்றியெல்லாம் பேசாமல் இருந்தேன்.
இந்த இயக்கம் வலிமையாக இருக்க வேண்டும். விதியின் அடிப்படையில் என்னைக் கட்சியிலிருந்து நீக்கவில்லை. அதற்காக அடுத்தகட்ட நடவடிக்கைஎன்ன என்பதை விரைவில் அறிவிப்பேன். அதற்காக வழக்கறிஞர்களுடன் பேசி முடிவு எடுப்பேன்.
எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர்தான். நிரந்தர பொதுச் செயலாளர் என்று இதுவரை தேர்தல் ஆணையம் சொல்லவில்லை.
எம்ஜிஆரும் ஜெயல்லிதாவும் தங்களை விமர்சித்தவர்களுக்கு எல்லாம் அங்கீகாரம் கொடுக்கவில்லையா? அதனால்தான் கட்சி இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.” என்று செங்கோட்டையன் பேசினார்.