புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என அம்மாநில சட்டப்பேரவையில் 16 முறை தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன, இருந்தாலும் பயனில்லை என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
புதுச்சேரி, உப்பளம் துறைமுக வளாகத்தில் இன்று நடைபெற்ற தவெக பொதுக்கூட்டம் அக்கடையின் தலைவர் விஜய் பேசியதாவது: ”ஒன்றிய அரசுக்குத்தான் தமிழ்நாடு, புதுச்சேரி தனி தனி. நமக்கு எல்லாமே ஒன்றுதான். நாம் எல்லோருமே சொந்தம் தான். வேறு வேறு இடத்தில் இருந்தாலும் நாம் சொந்தங்கள் இல்லாமல் ஆகிவிடுமா. பாச உணர்வு ஒன்று போதும்.
1977இல் எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தார். ஆனால் அதற்கு முன்னரே 1974இல் அவரின் ஆட்சி புதுச்சேரியில் அமைந்தது. அவரை மிஸ் பண்ணிவிடாதீர்கள் என நமக்கு அலர்ட் கொடுத்ததே புதுச்சேரி தான்.
தமிழ்நாடு மக்களைப் போல புதுச்சேரி மக்களும் என்னை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். புதுச்சேரிக்கும் சேர்த்து குரல் கொடுப்பேன். அது என்னுடைய கடமை.
புதுச்சேரி அரசு தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசு மாதிரி இல்லை. வேற ஒரு அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சியாகவே இருந்தாலும், கூட்டத்துக்கு வரும் மக்களுக்கு இந்த அரசு பாரபட்சம் காட்டாமல் பாதுகாப்பு கொடுக்கிறது. புதுச்சேரி முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதைப் பார்த்தாவது தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசு கற்றுக் கொள்ள வேண்டும். அவர் கற்றுக் கொள்ளவில்லை என்றால் வரும் தேர்தலில் கற்றுக் கொள்வார்கள்.
புதுச்சேரியை ஒன்றிய அரசு கண்டுகொள்ளவில்லை. மாநில அந்தஸ்து கோரிக்கையை மட்டுமா கண்டுகொள்ளவில்லை, இங்கு வளர்ச்சி ஏற்பட துணை நிற்கவும் இல்லை ஒன்றிய அரசு. மாநில அந்தஸ்து வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினாலும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இந்த வருடம் மார்ச் மாதம் கூட மாநில அந்தஸ்து கேட்டு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்தார்கள். அப்படி இதுவரை 16 முறை தீர்மானங்கள் நிறைவேற்றி அனுப்பியிருக்கிறார்கள்.
புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் மூடப்பட்ட ஐந்து மில்களை, பல்வேறு தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை. இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக எதையுமே செய்யவில்லை.
இங்கு ஐடி கம்பெனி உருவாக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. அதைப் பத்தி யார் பேசினாலும் அவர்களின் காதில் விழவே இல்லை. 200 நாள்கள் ஆகியும் இங்குள்ள அமைச்சருக்கு இன்னும் துறையே ஒதுக்கவே இல்லை. இது சிறுபான்மை மக்களை அவமானப்படுத்தும் செயல் என அவர்களே சொல்கிறார்கள்.
காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளில் முன்னேற்றமே இல்லை என மக்கள் சொல்கிறார்கள். சுற்றுலா தளமான புதுச்சேரியில் போதுமான அளவு பார்க்கிங் வசதி, கழிவறைகள் இல்லை. இதையெல்லாம் மேம்படுத்தவேண்டும்.
புதுச்சேரி - கடலூர் மார்க்கமாக ரயில் திட்டம் வேண்டும் என்பது நீண்டகாலமான கோரிக்கை.
புதுச்சேரி மக்களே திமுகவை நம்பாதீர்கள். நம்ப வைத்து ஏமாற்றுவதுதான் வேலையே. தமிழ்நாட்டை ஒதுக்குகின்ற மாதிரி புதுச்சேரியையும் ஒதுக்கக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம்.
20 லட்சம் மக்கள் வாழும் புதுச்சேரிக்கு மத்திய அரசு தோராயமாகவே நிதியை ஒதுக்குகிறது. அந்த நிதியும் அரசு ஊழியர்கள் சம்பளம், ஓய்வூதியத்துக்கே சென்றுவிடுவதால் கடன் வாங்க வேண்டிய நிலையில் உள்ளது புதுச்சேரி. இந்த நிலை மாற மாநில அந்தஸ்து வேண்டும்.
புதுச்சேரியின் கடனை அடைத்து. தற்சார்பு திட்டம் வேண்டும். தொழில் வளர்ச்சியும் தேவை.
இந்திய அளவில் ரேஷன் கடைகளே இல்லாத மாநிலமே புதுச்சேரி தான். இங்கேயும் அரசி, சர்க்கரை, கோதுமை பருப்பு வழங்கப்பட வேண்டும்.
காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது சிறை பிடிக்கப்படுகின்றனர். அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அதற்கு தீர்வுகாணப்பட வேண்டும்.
புதுச்சேரி தேர்தலில் தவெக கொடி பட்டொளி வீசி பறக்க வேண்டும்.” என்றார்.