பொன்முடி
பொன்முடி

பொன்முடி வழக்கில் திருப்பம்! 3 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம்!

தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் அளித்த  மூன்று ஆண்டுகள் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

கடந்த 2006-11 ஆண்டு திமுக ஆட்சியின்போது வருமானத்துக்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் சொத்துக்குவிப்பு செய்ததாக 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஊழல் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்  பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவர் மீதும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என 2016 ஆம் ஆண்டு விடுவித்தது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஊழல் ஒழிப்புத் துறை சார்பாக தொடரப்பட்ட வழக்கில் பொன்முடிக்கும் அவரது  மனைவி விசாலாட்சிக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும் தலா 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பொன்முடி தற்போதைய திமுக அரசில் வகித்துவந்த அமைச்சர் பதவியையும் எம்.எல்.ஏ பதவியையும் இழந்தார்.

இதைத் தொடர்ந்து பொன்முடி, விசாலாட்சி தரப்பில் தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பொன்முடிக்கும் விசாலாட்சிக்கும் உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

பொன்முடியின் எம்.எல்.ஏவாக பதவி வகித்த திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக சமீபத்தில் அறிவிக்கப் பட்ட நிலையில், இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்படுமா என்ற எதிர்பார்ப்பு, இந்த தீர்ப்பால் எழுந்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com