முன்ஜாமின் கிடைக்கவில்லை... உச்ச நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி மேல்முறையீடு!

Senthil balaji
செந்தில் பாலாஜி
Published on

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் செந்தில்பாலாஜியின் முன்ஜாமின் மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடியான நிலையில், அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

தமிழகத்தில் 2021 முதல் 2025ஆம் ஆண்டு வரை, டாஸ்மாக் மதுக்கடைகளின் விற்பனை கூடியது. ஆனால், அதன்மூலம் அரசுக்கு வரவேண்டிய வருவாய் குறைந்து வந்தது. இந்தக் குறைப்புக்கு, பல்வேறு முறைகேடுகள்தான் காரணம் என்று புகார் எழுந்தது.

இந்நிலையில், தமிழக அரசின் ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை, கடந்த தி.மு.க. ஆட்சியில் அத்துறையின் அமைச்சராக இருந்த வி. செந்தில் பாலாஜி, டாஸ்மாக் நிர்வாக இயக்குநராக இருந்த எஸ்.விசாகன் ஐ.ஏ.எஸ்., மண்டல மேலாளர்கள் டி.ராமதுரை முருகன், ஆர்.பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜியின் உதவியாளர் பாஸ்கர், ரதேஷ் ராஜ் சன்முகவேல், கரூரைச் சேர்ந்த எஸ். கார்த்திக் ஆகிய 7 பேர் மீதும் ஊழல் தடுப்புச் சட்டம், மோசடி உட்பட 11 பிரிவுகளின் கீழ் நேற்று வழக்கு பதிந்தது.

இதைத் தொடர்ந்து, சென்னை, கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் ஊழல் தடுப்புத் துறையினர் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, அவரது நண்பர்கள் வீடு, அலுவலகங்கள் ஆகிய இடங்களில் சோதனை செய்ததில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக ஊழல் தடுப்புத் துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், காவல்துறையின் கைது நடவடிக்கையிலிருந்து தற்காத்துக்கொள்ள ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுக்குறித்து, இன்று விசாரணை நடத்திய ஜி.கே.இளந்திரையன் அமர்வு, குற்றம்சாட்டப்பட்டவர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்கான முகாந்திரம் இருப்பதால், முன்ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.

முன்ஜாமின் வழங்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி மேல்முறையீடு செய்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com