அழகிரியை போல செந்தில்பாலாஜி...ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா
Published on

மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அரசியலில் இருந்து காணாமல் போனதை போல், கரூரில் செந்தில் பாலாஜி காணாமல் போவார்.

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே கரூர் விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் எஸ்ஐடி அமைத்திருந்து. அதை எதிர்த்து தவெக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில், இது தொடர்பாக ஒரு வாரமாக விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணையை கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "வலி மிகுந்த நாட்களில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் வாயில் இருந்து வார்த்தைகள் கூட முழுமையாக வர முடியவில்லை. நெருக்காடியான காலகட்டத்தில் உள்ளோம்.

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைவருடைய சுற்றுப்பயணம் மிகப்பெரிய எழுச்சியாக உருவானது.

இது முதல் கூட்டம் கிடையாது, திருச்சி, நாமக்கல், திருவாரூர், அரியலூர், நாகப்பட்டினம் என பல ஊர்களுக்கு செல்லும்போது கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத எழுச்சியை மக்கள் உருவாக்கினர்.

ஆனால் உண்மையைப் பதிவு செய்ய வேண்டும். எந்த மாவட்டத்திலும் காவல்துறை ஆதரவு வழங்கியது இல்லை. அரியலூரில் மட்டும் வழங்கினார்கள். எங்களுக்கு பெரம்பலூர் எஸ். பி பல தகவல்களை வழங்கினார். அதனால் கடைசி நேரத்தில் அதை ரத்து செய்தோம்.

நாங்கள் நல்லபடியாக நாமக்கல் பிரச்சார பயணத்தை முடித்துவிட்டு, காவல்துறை சொன்ன 3 முதல் 10 மணி வரை என்ற உரிய நேரத்தில் கரூர் சென்றோம்.

எங்களுடைய நேரலையை எல்லா ஊடகங்களுக்கும் கொடுத்திருக்கிறோம். தலைவர் எங்கிருந்தார் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் தலைவர் தாமதமாக வந்தார் என்ற அபாண்டமான குற்றச்சாட்டை எங்கள் மீது வைக்கின்றனர்.

கரூரில் காவல்துறையினர் தான் எங்களை வரவேற்றார்கள். எந்த மாவட்டத்திலும் இப்படி நடக்கவில்லை. அவர்கள்தான் திட்டமிட்ட இடத்தில் நின்று பேசுங்கள் என்று சொன்னார்கள்.

தலைவர் எல்லாமே வசதியாக இருக்கிறதா என கேட்டுவிட்டுத்தான் மேலே எழுந்து பேச ஆரம்பித்தார்.

ஏற்பாட்டில் தவறுகள் இருந்தால் ஏன் காவல்துறை எல்லையிலேயே எங்களை வரவேற்க வேண்டும் என்பது எங்கள் முதல் கேள்வி.

பேசும்போது தலைவர் மக்களைப் பார்த்துத்தான் பேசினார். எங்கே தண்ணீர் கேட்டார்களோ அங்கே அவர் கையாலேயே தண்ணீர் கொடுத்தார்.

ஆம்புலன்சுக்கு அவரே வழிவிட சொன்னார். மக்களைப் பார்த்துவிட்டு, அவரால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பேச்சை முடித்துவிட்டு கிளம்பினார்.

இந்த இடத்தை அழுத்தம் கொடுத்துதான் எங்களுக்கு கொடுத்தார்கள் என்பதை உச்சநீதிமன்றத்தில் கொடுப்போம்.

அந்த இடத்தை எந்தளவிற்கு வலுக்கட்டாயம் பண்ணி எங்களுக்கு கொடுத்தார்கள் என்பதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தெரிவித்திருக்கிறோம். தமிழக அரசின் மீதும் தமிழக அரசின் விசாரணை மீதும் நம்பிக்கை இல்லை என்று ஏன் சொல்கிறோம் என்றால், சம்பவம் நிகந்தபிறகு கரூர் பார்டரில், நான், ஆனந்த், நிர்மல் குமார், அருண்ராஜ் ஆகியோர் காத்துக்கொண்டிருந்தோம். காவல்துறைதான் ‘கலவரம் வரும்.. நீங்கள் வரவேண்டாம்’ என்றார்கள். எங்களுடைய மொபைல் நெட்வொர்க்கை கூட செக் பண்ணலாம்.

திமுக அரசு திட்டமிட்டு தவெக-வினர் சம்பவ இடத்திற்கு வரக்கூடாது என ஒட்டுமொத்த தமிழக வெற்றிக் கழகத்தினரையும், மாவட்ட செயலாளர்களையும் தீவிரவாதிகளைப் போல் தடியடி நடத்தி அனுப்பினார்கள் என்பதையும் நாங்கள் பதிவு செய்தோம்.

கரூர் விவகாரத்தை வைத்து தவெக முடக்க திமுக நினைத்தது.

41 குடும்பங்களையும் தத்தெடுக்கப்போகிறேன் என்று விஜய் கூறியுள்ளார். அவர்களுடன் தொடர்ந்து பயணிப்போம்.

கரூர் போலீஸ் முன்னாள் அமைச்சர் ஒருவரின் கட்டுப்பாட்டில் உள்ளது. கரூர் இப்போது எப்படி இருக்கிறது என்றால், ’ஒருகாலத்தில் மதுரைக்கு போனால் காலை வெட்டுவோம்’ என்று சொல்வார்கள். மதுரை அழகிரியின் கோட்டை என்று சொல்வார்கள். ஆனால், இன்று அழகிரி அரசியலிலேயே இல்லை. அந்த மாதிரி கரூர் க்ளீன் பண்ணப்படும். எங்கள் தலைவர் முதலமைச்சர் ஆகும்போது தவறு செய்தவர்களை கண்டுபிடிப்போம்.” எனப் பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com