அசோக்குமார் - செந்தில் பாலாஜி
அசோக்குமார் - செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜியின் தம்பி கைது- அமலாக்கத் துறை மறுப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கைது செய்யப்படவில்லை என அமலாக்கத் துறை விளக்கம் அளித்துள்ளது.

பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதே வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் மீதும் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை பல முறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால், அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று அசோக்குமாரை கைது செய்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்தத் தகவலை அமலாக்கத் துறை உறுதிசெய்யவும் இல்லை; மறுக்கவும் இல்லை.

இந்த நிலையில், அசோக்குமார் கைது குறித்து அமலாக்கத் துறை இன்று மதியம் விளக்கம் அளித்துள்ளது. அதில், செந்தில் பாலாஜியின் தம்பி கைதுசெய்யப்படவில்லை எனவும், அவரை விசாரணைக்கு வரும்படி கடந்த ஜூன் 16, 21, 29, ஜூலை 15 ஆகிய தேதிகள் சம்மன் அனுப்பியும் அவர் வரவே இல்லை; அதற்கான காரணத்தையும் அவர் தரப்பில் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி நிர்மலா, நிர்மலாவின் தாயார் இலட்சுமி ஆகியோருக்கும் நான்கு முறை தனித்தனியாக சம்மன்கள் அனுப்பப்பட்டன. அவர்களும் நேரில் ஆஜராகவில்லை என்றும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com