திருவண்ணாமலையில், இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இரு காவலர்களும் பணியில் இருந்து நிரந்தர பணி நீக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் தனது வளர்ப்புத் தாயுடன் கடந்த செப். 29 இரவு காளஹஸ்தியில் இருந்து வாழைத்தார் ஏற்றிவந்த மினி வேனில் திருவண்ணாமலை மார்க்கெட்டுக்கு வந்திருக்கிறார். காய்கறி மண்டியில் லோடு இறக்கியப் பிறகு, மறுநாள் அதிகாலை 2.30 மணியளவில் மீண்டும் ஆந்திராவை நோக்கி புறப்பட்டிருக்கின்றனர்.
புறநகர் பகுதியில் சென்று காத்திருந்தபோது, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த திருவண்ணாமலை கிழக்குக் காவல் நிலைய காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகிய இருவரும் சீருடையில் சென்று இருப் பெண்களிடமும் விசாரித்திருக்கின்றனர். ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்ததையடுத்து, துணைக்கு வேறு யாரும் வராததையும் உறுதி செய்துகொண்ட காவலர்கள், இருப் பெண்களையும் மிரட்டி தங்களுடன் அழைத்துசென்றிருக்கின்றனர்.
ஆள் நடமாட்டம் இல்லாத ஏரிக்கரை பகுதிக்குச் சென்றவுடன் இளம்பெண்ணை இருக்காவலர்களும் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். இந்த விவகாரம் வெளியில் தெரியவந்ததையடுத்து, காவலர்கள் சுரேஷ் ராஜ், சுந்தர் இருவரும் கைதுசெய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, இருக்காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், விசாரணையின்போது இருக்காவலர்களும் பாலியல் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்றைய தினம் பணியில் இருந்தும் நிரந்தரமாக (டிஸ்மிஸ்) நீக்கப்பட்டிருக்கின்றனர்.