
நீட்தேர்வு, அதன் முறைகேடுகளைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தனர். அதற்காக இன்று காலையில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த அந்த அமைப்பின் குழுக்கள் ஆளுநர் மாளிகைக்கு அருகில் திரண்டனர்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு உடனடியாக விலக்கு அளி, தேர்வை நடத்த லாயக்கற்ற தேசிய தேர்வு முகமையைக் கலைத்துவிடு, முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானே பதவி விலகு என அவர்கள் முழக்கம் இட்டனர்.
சைதாபேட்டை நீதிமன்றத்துக்கு மேல் அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை.
உடனே சாலையில் மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் முற்றுகைப் போராட்டத்தைத் தொடங்க முற்பட்டனர்.
ஆனால் அவர்களைப் பாய்ந்துசென்று கயிற்றால் வளைத்து பேருந்தில் ஏற்ற முயன்றனர்.
அதையும் மீறியவர்கள் மீது காவலர்கள் தங்கள் பலத்தை ஏவினர்.
போலீசின் இந்தச் செயல் அராஜகமானது என்றும் ஆண் போலீஸ் பெண் மாணவர்களைப் பிடித்து இழுத்தது என்றும் மாணவர் சங்க மாநிலச் செயலாளர் மிருதுளா ஊடகத்தினரிடம் குற்றம்சாட்டினார்.
போலீஸ் தாக்குதலில் தென்சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் லோகேஷ் கை மூட்டில் பாதிப்பு ஏற்பட்டு காயம் அடைந்தார். இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.