''பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு வெட்கி தலைகுனிய வேண்டாமா?''

Edappadi K. Palaniswami
எடப்பாடி பழனிசாமி
Published on

தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டாமா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாடு, பெண்களுக்குப் பாதுகாப்பானதா? கோவையில் சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவர் காரில் கடத்தப்படுவது போன்ற சிசிடிவி காட்சிகள் செய்திகளில் வந்துள்ளன. திமுக ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில் பெண்கள் பாதுகாப்பை முற்றிலுமாக சமரசம் செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்தி வந்த மூன்றாவது நாளே, அதே கோவையில், பெண் கடத்தப்படும் சிசிடிவி காட்சி வெளிவருவது, திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு கொஞ்சம் கூட சட்டத்தின் மீதோ, காவல்துறை நடவடிக்கை மீதோ அச்சமே இல்லை என்பதையே காட்டுகிறது.

எந்த நேரத்திலும், எங்கும் பெண்களால் நிம்மதியாக, பாதுகாப்பாக இருக்க முடியாத ஒரு பதற்றமான நிலையை உருவாக்கிவிட்டு, இந்த அரசை "பெண்களுக்கான அரசு" என்று கூறுவதற்கு முதல்வரும், அவரது மகனும் கூச்சப்பட வேண்டும்.

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்று உங்கள் பெயருக்கு பின்னால் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டாமா?

மேற்கூறிய சம்பவங்கள் குறித்து உரிய விசாரணையை துரிதப்படுத்தி, பெண்களைக் கண்டுபிடித்து, குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com