பாடகி சுசீலா, கவிஞர் மு.மேத்தாவுக்கு 'கலைத்துறை வித்தகர் விருது' - மு.க.ஸ்டாலின் வழங்கினார்

பாடகி சுசீலா, கவிஞர் மு.மேத்தாவுக்கு 'கலைத்துறை வித்தகர் விருது வழங்கும் முதலவர் ஸ்டாலின்
பாடகி சுசீலா, கவிஞர் மு.மேத்தாவுக்கு 'கலைத்துறை வித்தகர் விருது வழங்கும் முதலவர் ஸ்டாலின்
Published on

பாடகி சுசீலா, கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

"செய்தி மக்கள் தொடர்புத்துறையின் 2022-2023ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றி பாராட்டிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில், முத்தமிழறிஞர் கலைஞரின் பெயரில் "கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது" ஒவ்வொரு ஆண்டும் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் திங்கள் 3ஆம் நாளன்று வழங்கப்படும் என்றும், தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், நினைவுப் பரிசும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினைச் செயல்படுத்துகின்ற வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்பேரில், விருதாளர்களைத் தேர்வு செய்யும் பொருட்டு, திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையில், நடிகர் சங்கத் தலைவர் நாசர், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அக்குழுவின் பரிந்துரையின்படி 2022ஆம் ஆண்டிற்கான "கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட திரைப்படத் துறையில் சுமார் 500 திரைப்படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதிப் புகழ்பெற்ற ஆரூர்தாசுக்கு கடந்த 3.6.2022 அன்று முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளையொட்டி கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிச் சிறப்பித்தார்.

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வழக்கமாக வழங்கப்படும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுடன், சிறப்பினமாகப் பெண்மையைப் போற்றும் வகையில் இந்த ஆண்டு கூடுதலாக ஒரு பெண் திரைக்கலைஞருக்கும் இந்த விருதினை வழங்கிச் சிறப்பித்திட முதல்-அமைச்சர் 11.07.2024 அன்று உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, திரையுலகில் 20,000க்கும் மேற்பட்ட பலமொழிப் பாடல்களைப் பாடியவரும், "தென்னிந்தியாவின் இசைக்குயில்" என்றும், "மெல்லிசை அரசி" என்றும் பாராட்டப்பட்டவருமான திரைப்படப் பின்னணிப் பாடகி பி.சுசீலாவுக்கும், தமிழ்ப் பேராசிரியரும், புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்தவரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கவிஞர் மு.மேத்தாவுக்கும், 2023ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் 24.9.2024 அன்று அறிவிப்பு வெளியிட்டார்.

அந்த அறிவிப்பின்படி, முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நினைவாக கவிஞர் முமேத்தாவுக்கும், பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கும் 2023ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது மற்றும் தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், நினைவுப் பரிசும் வழங்கி சிறப்பித்தார்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com