
தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பீகாரைத் தொடா்ந்து நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கைக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது தொடா்பாக அனைத்து மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளுடன் தோ்தல் ஆணையம் ஏற்கெனவே இரு உயா்நிலைக் கூட்டங்களை நடத்தியது.
இதனைத் தொடர்ந்து இன்று செய்தியாளர் சந்திப்பில் தேர்தல் ஆணையம் ஞானேஷ் குமார் பேசியதாவது:
“இந்தியாவில் 1951 முதல் 2004 வரை இதுவரை 8 முறை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடைபெற்றது. இடப்பெயர்வு, இட்டைப்பதிவு, இறப்பு உள்ளிட்ட காரணங்களால் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடைபெற உள்ளன.
ஏற்கெனவே, பீகாரில் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. தற்போது இரண்டாம் கட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ள வேண்டிய மாநிலங்கள் குறித்து அறிவிக்கப்படவுள்ளது. 36 மாநிலங்களில் உள்ள தேர்தல் அலுவலர்களுடன் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டது.
இதன்படி, இரண்டாம் கட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவுள்ளன.
அந்தமான், கோவா, லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் சத்தீஸ்கர், குஜராத், கேரளம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் முடிக்கப்பட்டு 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்” என்றார்.