வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

"ஐயாவுக்கு அந்த ஒரு வார்த்தை வேண்டும்!” - அப்பாவு பற்றி வானதி

“தொகுதி மறுசீரமைப்பில் மாநிலங்களுக்கு உள்ள கவலைகளைப் புரிந்துகொள்கிறோம்” என்று கூறிய பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், “ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானம் தேவையற்றது” என்றும் கூறியுள்ளார்.

தொகுதி மறுசீரமைப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியது:

”தென்னிந்திய மாநிலங்கள் பல்வேறு சமூக மேம்பாட்டு நடவடிகையாலும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதாலும் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கின்றன.

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பில் மாநிலங்களுக்கு உள்ள கவலைகளையும் அதில் உள்ள பிரச்னைகளையும் தமிழக பா.ஜ.க. புரிந்துகொள்கிறது.” என வானதி சீனிவாசன் பேசிக் கொண்டிருக்கும்போதே...

குறுக்கிட்ட அவைத்தலைவர் அப்பாவு “ஆதரிக்கிறோம் (அப்படித்தானே என்கிறபடி)” எனக் கூற, அதற்கு வானதி, ”ஐயாவுக்கு அந்த ஒரு வார்த்தை வேண்டும்” என்று குறிப்பிட்டதும் அவை சிரிப்பலைகளில் மூழ்கியது.

தொடர்ந்து பேசிய வானதி, “கவலையைப் புரிந்துகொள்கிறோம். அக்கறை எடுத்துக்கொள்கிறோம். வேண்டிய இடத்தில் பேசுகிறோம்.” என்றார்

மேலும், ”மக்கள் தொகை, காலநிலை மாற்றதிற்கு ஏற்ப ஒரே நாடு, ஒரே தேர்தலுக்காக முன்னாள் குடியரசுத் தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு கட்சிகளுக்கும் இது தொடர்பாக கருத்துக் கூற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதை ஒரு சீர்திருத்தமாகப் பார்க்க வேண்டுமே தவிர, தங்களுடைய தனிப்பட்ட கருத்துகளைக் கொண்டு மற்றவர்களையும் குழப்பும் செயலில் ஈடுபடக்கூடாது.” என்றார் அவர்.

குறிப்பாக, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக 'நெஞ்சுக்கு நீதி' புத்தகத்தில் இரண்டாம் பாகத்தில் கலைஞர் கருணாநிதி கூட ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆதரவான கருத்தை தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com