சரத்குமார்
சரத்குமார்

பா.ஜ.க.வில் ஐக்கியமான ச.ம.க.! – சரத்குமார் சொல்லும் காரணம்!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை நடிகர் சரத்குமார் பாஜகவுடன் இணைத்துள்ளார்.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக முன்னதாக சமக தலைவர் சரத்குமார் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள சமக அலுவலகத்தில், மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சமகவை பாஜகவுடன் சரத்குமார் இணைத்துள்ளார்.

சென்னையில் நடந்த இணைப்பு விழாவில் சரத்குமார் பேசியதாவது: வருங்கால இளைஞர்களின் நலனுக்காகவும், தேசிய நலனுக்காகவும் இந்த முடிவை நான் எடுத்தேன். இதனை கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசினேன். அவர்கள் எனது முடிவை ஏற்று கொண்டனர். தலைவர் எவ்வழியோ அவ்வழி என்ற கருத்தை தெரிவித்தனர்.

ஒவ்வொரு தேர்தலிலும் எந்த இடங்களில் , எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது சங்கடமாக இருந்தது. நமது வலிமைக்கு பா.ஜ.க.வுடன் இணைத்தால் என்ன என்ற எண்ணம் வந்தது. இதனால் பா.ஜ.க. வுடன் கட்சியை இணைந்துள்ளேன்.

காமராஜர் போல ஆட்சி வராதா என்ற ஏக்கம் இருந்த போது பிரதமர் மோடியின் ஆட்சியை பார்க்கிறேன். காமராஜர் ஆட்சியை பிரதமர் மோடி தருகிறார். இந்த இணைப்பு எழுச்சியின் துவக்கம், எளிய குடும்பத்தில் பிறந்து நாட்டின் பிரதமராக மோடி வந்துள்ளார். நமது சக்தியை மிகப்பெரிய சக்தியுடன் இணைத்துள்ளோம்.

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி, இளைஞர்களின் நலன் நன்றாக அமைந்துள்ளது. போதைப் பொருளை பிரதமர் மோடியால் தான் தடுக்க முடியும். 2026இல் தமிழகத்தில் இந்த கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். வலிமையான ஆட்சியை மீண்டும் தரும். இது மக்களுக்கான முடிவு.” இவ்வாறு சரத்குமார் கூறினார்.

சரத்குமார் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது, சமக - பாஜகவில் இணைவதற்கு கட்சி நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com