ஆளுநர் ஆர்.என். ரவி
ஆளுநர் ஆர்.என். ரவி

மதம் மாற்றுவதற்கே கால்டுவெல், ஜி.யு.போப்பை பிரிட்டிஷ் அரசு நியமித்தது– ஆளுநர் இரவி

கால்டுவெல், ஜி.யு.போப் போன்றவர்களை மதமாற்றம் செய்வதற்காகவே பிரிட்டன் அரசாங்கம் நியமனம் செய்தது என்று ஆளுநர் ஆர்.என். ரவி பேசியிருக்கிறார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், அய்யா வைகுண்டரின் 192ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 'மகாவிஷ்ணுவின் அவதாரம் ஸ்ரீ வைகுண்ட சுவாமி அருளிய சனாதன வரலாறு' என்ற புத்தகத்தை ஆளுநர் ரவி வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியது:

”அய்யா வைகுண்டர் தோன்றிய சமூக காலகட்டம் சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட காலகட்டம். சனாதன தர்மத்தைக் காக்கவே அய்யா வைகுண்டர் தோன்றினார். சனாதனக் கோட்பாட்டின் அடிப்படையில் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். ஒரே தெய்வத்தின் குழந்தைகளாக இருந்தார்கள். ஏற்றத்தாழ்வு இல்லை. வெளியிலிருந்து வந்தவர்களால்தான் பிரச்னை தொடங்குகிறது. இந்த ஒற்றுமை கிழக்கிந்திய கம்பெனிக்கு சவாலாக இருந்தது.

வங்கத்தை முதலில் கைப்பற்றிய கிழக்கிந்திய கம்பெனி, இந்தியாவை காலனி நாடாக மாற்றினார்கள். உள்ளூர் மக்களைக் கொன்றார்கள். எப்படியென்றால், தொற்று நோயால். லட்சக்கணக்கில் மக்களைக் கொன்றார்கள்.

பாரத மக்களின் மொழி, உணவு, உடைகள் வெவ்வேறாக இருந்தாலும், அவர்கள் ஒன்றாக இருந்ததற்குக் காரணம் சனாதன தர்மம்தான். பிரிட்டிசார் இந்த ஒற்றுமையை சீர்குலைக்க முயன்றனர் .

ராபர்ட் கால்டுவெல், ஜி.யு. போப் போன்றவர்கள் மதமாற்றத்துக்காகவே பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்டவர்கள். யாரோ எழுதியிருந்தார்கள் எங்கோ படித்திருக்கிறேன், கால்டுவெல் பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காதவர்.

அவர்கள் இருவரும் சென்னை மாகாணத்தில் மதமாற்றத்தைச் செய்தார்கள். திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது.

எனக்கு இயேசுவும் பிடிக்கும், பைபிளும் பிடிக்கும். ராமேஸ்வரம், காசி ஆகியவை ஒட்டுமொத்த நாட்டிற்கும் பொதுவானவை. ஆங்கிலேயர்கள் தங்களது ஆட்சிக் காலத்தில் சனாதன தர்மத்தை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.” என்று ரவி பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com