தென்மாவட்ட வெள்ளம்: ஸ்டாலின் மீது எதிர்க்கட்சிகள் அதிருப்தி!
தென்மாவட்ட மழை வெள்ளத்தை தமிழக அரசு சரியாக கையாளவில்லை என்று எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோர் விமர்சித்துள்ளனர்.
நெல்லையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். நெல்லை, தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: “தமிழக அரசு செல்வதற்கும் இங்கே வந்து பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. மழை பாதிப்பு தொடர்பாக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இருந்தால் பாதிப்பைக் குறைத்து இருக்கலாம். 4 மாவட்ட மக்கள் மழையால் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளனர். உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால் மழை நீர் தேங்கியிருக்காது. மழை பாதிப்பால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும்.
தூத்துக்குடியில் ஏற்கனவே 85 சதவிகித மழை நீர் வடிகால் பணிகள் நிறைவு பெற்றிருந்தன. இரண்டரை ஆண்டுகளில் எஞ்சிய 15 சதவிகித பணிகளை தி.மு.க. அரசு முடிக்கவில்லை. வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு உதவி வழங்க வேண்டும். மழை பாதித்த மாவட்டங்களில் மக்கள் உணவு இன்றி தவித்து வருகின்றனர். மழை பாதிப்பை ஆய்வு செய்யாமல் எப்படி நிவாரண தொகை கேட்க முடியும். இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவே மு.க ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். நாட்டை பற்றியே கவலைப்படாத முதல்-அமைச்சர்தான் மு.க ஸ்டாலின்.குடிமராமத்து திட்டத்தை திமுக அரசு கைவிட்டுவிட்டது. அதனால் தான் கனமழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன" இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அதேபோல், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ”தமிழகத்தின் தென்மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதைக் கண்காணித்து களத்தில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்றுள்ளார்.
'ரோம் நகரம் எரியும் போது நீரோ மன்னர் ஃபிடில் வாசித்தார்' என்ற புகழ்பெற்ற பழமொழி, ஸ்டாலின் செயலால் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் இருக்கும் போது பிரதமர் மோடியை சந்திக்க முடிவு செய்துள்ளார். இது அவரது உண்மையான பயண நிகழ்ச்சி நிரலில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட கடைசி நிமிட ஏற்பாடாகும்.
26/11 மும்பை தாக்குதலின்போது, அப்போதைய மகாராஷ்டிர முதல்வர் ஓபராய் ஹோட்டலுக்கு வெளியே திரைப்பட தயாரிப்பாளரை அழைத்து வந்தார். அதேபோன்று, வெள்ள நிவாரணத்தை கண்காணிக்க முதல்வர் ஸ்டாலின் சார்பாக நியமிக்கப்பட்டுள்ள அவரது மகன், திரைப்பட இயக்குநர் ஒருவருடன் ஆய்வு செய்து வருகிறார். மாநில அரசின் நிவாரணம் என்பது தென் தமிழக மக்களுக்கு ஒரு தொலைதூரக் கனவாகவே இருக்கிறது." என அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

