வேலுமணியும் முடிவெடுத்துவிட்டாரா?

எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி
Published on

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எம்.ஆர். விஜயபாஸ்கரின் பதவி விலகல் ஏற்கப்பட்ட நிலையில், தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

குதிரை பேரம், கழுதை பேரம், ஒட்டக பேரம் என கட்சிக்கு கட்சி மாறிமாறி குற்றம்சாட்டிக் கொள்கின்றன. 

இந்த சூடான சூழலில், பரபரப்புக்கு மையமான காரணமாக இருக்கும் அ.தி.மு.க.வில் இன்னும் உட்பூசல் ஒழியவில்லை. 

அந்தக் கட்சியிலிருந்து மேலும் சில எம்.எல்.ஏ.கள் தங்களின் பதவியிலிருந்து விலகிவிட்டு ஆளும் கட்சியான த.வெ.க.வில் சேர முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.

குறிப்பாக,  நத்தம் விசுவநாதன், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் அதிருப்தியாக தனியாகப் பிரிந்து விஜய் ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு சமாதானம் ஆனவர்கள்.

அவர்கள் இருவருக்கும் எடப்பாடி பழனிசாமி இணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கிய நிலையில், ஏற்கெனவே வகித்த மாவட்டச் செயலாளர் பதவிகள் வழங்கப்படவில்லை.

இதனால் அவர்கள் இருவரும் இதுவரை எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வாழ்த்து பெறாமல் இருந்துவருகிறார்கள்.

இவர்களுடன் மற்ற பல மூத்த நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமி மீது தொடர்ந்து அதிருப்தியில் இருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. 

இதனிடையே, இன்று ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசிய வேலுமணி, தனக்குப் பதவி வழங்கவில்லை என்பதைவிட, தன்னை நம்பிவந்த 30 மாவட்டச்செயலாளர்களின் பதவி முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார். 

என்னதான், அதிருப்தி அணியினருடன் சமாதானம் ஆனபோதும், எடப்பாடி பழனிசாமி அவர்களின் மாவட்டச்செயலாளர் பதவியை மட்டும் தராமல் கிடுக்கிப்பிடி போட்டு வைத்துள்ளார். கட்சியில் மா.செ. பதவியைவிட வேறு பதவிகள் எல்லாம் அலங்காரத்துக்குதான் என்பதாலும், வேலுமணி பழைய பாதையைத் தேர்ந்தெடுக்கலாம் என்றே அவருடைய ஆதரவாளர்கள் தரப்பில் அடித்துச் சொல்கிறார்கள். 

logo
Andhimazhai
www.andhimazhai.com