தபால் வாக்கு செலுத்தும் காவலர்கள்
தபால் வாக்கு செலுத்தும் காவலர்கள்Office

தபால் வாக்கு செலுத்த காவலர்களுக்கு சிறப்பு ஏற்பாடு!

சென்னையில் பணியாற்றும் காவலர்கள் இன்று முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை தபால் வாக்கு செலுத்த சிறப்பு வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

“சென்னை மாநகர காவல் துறையில் பணியாற்றுபவர்களில் தபால் வாக்கு கேட்டு விண்ணப்பித்த காவல் அதிகாரிகள் அனைவரும் இன்று முதல் 13ஆம் தேதி வரை காலை 9 முதல் மாலை 5 மணி வரை தபால் வாக்குகளை செலுத்த சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 3 தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகத்தில் சிறப்பு தபால் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை பேசின் பாலம் சாலை, மூலகொத்தளம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சியின் வட சென்னை வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தபால் வாக்குச்சாவடி மையத்தில் வடசென்னை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், பெரம்பலூர் ஆகிய மக்களவை தொகுதிகளை சேர்ந்தவர்கள் தபால் வாக்குகளை செலுத்தலாம்.

அடையார், முத்துலட்சுமி சாலையில் உள்ள தெற்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில், தென் சென்னை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் தபால் வாக்குகளை செலுத்தலாம்.

செனாய் நகர், புல்லா அவென்யூவில் உள்ள மத்திய வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் மத்திய சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், திருச்சி, கடலூர், சிதம்பரம் மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகளை சேர்ந்தவர்கள் தபால் வாக்குகளைச் செலுத்தலாம். தகுதியுள்ள போலீஸார் வாக்குச்சாவடிகளுக்கு தகுந்த ஆவணங்கள் மற்றும் காவலர் அடையாள அட்டையுடன் சென்று வாக்களிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.” என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com