
சட்டப்பேரவையில் நேற்று முதல் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இன்று, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, நெடுஞ்சாலைகள் - சிறு துறைமுகங்கள் துறை, பொதுப் பணித்துறை, மனிதவள மேலாண்மைத் துறை ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.
சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியதும், கர்நாடக வனத்துறையினால் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்கள் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் செளமியா அன்புமணி, பா.ஜ.க., சி.பி.எம்.,சி.பி.ஐ., உட்பட்ட கட்சிகளால் கொண்டு வரப்பட்டது.
சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினரகளின் கருத்து:
கர்நாடக வனத்துறையினரின் இந்த செயல் மனித உரிமை மீறல் என்றும், இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் கூறினார்.
இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும் கர்நாடகா அரசு வழங்கிய ரூ. 5 லட்சத்துடன், தமிழக அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்றும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மாடுகளை தேடி சென்ற தமிழர்கள், மான் வேட்டைக்கு சென்றார்கள் என்று என்கவுன்டர் செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் கூறினார்.