தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் நடத்திய சிறப்பு டெட் தேர்வின் முடிவு வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்புவரை பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள், டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது.
இந்நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கான டெட் தாள் -1 தேர்வு தமிழகம் முழுவதும் 222 மையங்களில் கடந்த ஜூலை 4ஆம் தேதி நடைபெற்றது. இதில் 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல, பட்டதாரி ஆசிரியர்களுக்கு டெட் தாள்-2 தேர்வு கடந்த ஜூலை 4ஆம் தேதி, மாநிலம் முழுவதும் 613 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதில் 1,67,743 பேர் தேர்வெழுதினர்.
தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், டெட் தேர்வு தாள் -1 எழுதிய இடைநிலை ஆசிரியர்களில், 80.8% பேரும், டெட் தேர்வு தாள் -2 எழுதிய பட்டதாரி ஆசிரியர்களில் 38.33% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்தத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் ஐந்து நாள்களுக்குள் தங்களது தகுதிச் சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.