இந்தியாவில் உள்ள பாசிச கும்பல் பொய் செய்தியை பரப்புவதையே அடிப்படைய கொள்கையாக, முழுநேர வேலையாக செய்து கொண்டிருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சமூக ஊடக சவால்களை எதிர்கொள்வது குறித்து சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
“இப்போது இந்தியாவில் உள்ள பாசிச கும்பல் பொய் செய்தியை பரப்புவதையே அடிப்படையைக் கொள்கையாக, முழுநேர வேலையாக செய்து கொண்டிருக்கிறது. அது யார் என்று உங்களுக்குத் தெரியும். பொய் செய்தியின் மூலமாக மக்களை குழப்ப, அறிவை மழுங்கடிக்க கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டே இருக்கின்றனர்.
பொய் செய்திகளை எப்படி எதிர்கொள்வது என்ற கேள்வி உலகம் முழுக்க உள்ளது. உலக அளவில் இன்று மிகப்பெரிய இரண்டாவது பிரச்னையாக இருப்பது தவறான தகவல்கள்தான். இதுமட்டுமல்ல, வெறுப்பு பேச்சும் நாட்டைப் பாதிக்கிறது. சிறுபான்மை மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு நிறைய உதாரணங்களை சொல்ல முடியும்.
மூன்று வருடங்களுக்கு முன்னர், பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு இருப்பதை ஒழித்துக்கட்ட வேண்டும் என பேசியிருந்தேன். என் பேச்சை திரித்து நான் இனவெறுப்பை விதைப்பதாக ஒரு கும்பல் வெறுப்பை பரப்பியது.
போலி செய்திகளை தடுக்க தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு குழு ஏற்படுத்தப்பட்டது. அதனால் சமீப ஆண்டுகளாக தமிழ்நாட்டில் போலி செய்திகள் பரவுவது குறைந்துள்ளது.” என்றார்.