சுப. உதயகுமாரன் முகநூல் பதிவு
சுப. உதயகுமாரன் முகநூல் பதிவு

பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவா?- நெடுமாறன் முடிவுக்கு சுப. உதயகுமாரன் வரவேற்பு!

மக்களவைத் தேர்தலில் பழ.நெடுமாறன் தோற்றுவித்த தமிழர் தேசிய முன்னணி பா.ஜ.க. அணிக்குச் சார்பாக இயங்குகிறார் என வதந்தி பரப்பப்பட்டது; அது இப்போது முறியடிக்கப்பட்டிருக்கிறது என்று பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவர் சுப. உதயகுமாரன் தெரிவித்துள்ளார். 

நெடுமாறன் தலைமையிலான உலகத் தமிழர் பேரமைப்பில் உள்ள உதயகுமாரன், தன் முகநூல் பக்கத்தில், “ ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் பாஜக சார்பாக இயங்குகிறார் எனும் வதந்தி முறியடிக்கப்பட்டிருக்கிறது. இந்த தேர்தல் "இந்திய சனநாயகத்தின் வாழ்வா, சாவா" பற்றியது எனும் ஆழமானப் புரிதலுடன் ஐயா அவர்கள் முடிவெடுத்து இருக்கிறார்கள். உலகத் தமிழர் பேரமைப்பின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் என்கிற முறையில் வரவேற்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார். 

சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் சிறு சிறு மக்கள்நல அமைப்புகளின் ஆதரவு யாருக்கு என்பது பற்றி பரவலாக எதிர்பார்ப்பு இருப்பது வழக்கம். இதன் ஓர் அங்கமாக, உதயகுமாரன் கூறியுள்ளதுபடி, பா.ஜ.க.வுக்குச் சார்பாக நெடுமாறன் இயங்குகிறார் என தகவல்கள் பரவியுள்ளன. ஆனால், நெடுமாறன் நிறுவனத் தலைவராக உள்ள தமிழர் தேசிய முன்னணி கட்சியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், தஞ்சையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அதில், வரும் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது. 

அதில், “ நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பாசிச பா.ச.க. வெற்றி பெற்றுவிடுமானால், எதிர்காலத்தில் சனநாயகமே நம்முடைய நாட்டில் நிலவாது. பாசிச சர்வாதிகார இந்துத்துவ ஆட்சி நிலைநிறுத்தப்படும். மதச் சிறுபான்மையினர் மற்றுமுள்ள மொழிச் சிறுபான்மையினர் ஒடுக்கப்படுவார்கள். சமற்கிருத மொழியும் பண்பாடும் திணிக்கப்படும். மனித உரிமைகள் துச்சமாக மதிக்கப்பட்டுத் தூக்கி எறியப்படும். ஒட்டுமொத்தமாக நாட்டின் சனநாயகத்திற்கு நேரிடக்கூடிய பேரபாயத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டுமானால், பா.ச.க. கூட்டணி அடியோடு முறியடிக்கப்பட வேண்டும். அதற்குரிய வலிமை தற்போதைய சூழ்நிலையில் இந்தியா கூட்டணியைத் தவிர, வேறெந்த அணிக்கும் இல்லை என்பது அப்பட்டமான  உண்மையாகும். எனவே, அக்கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com