
மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த போது பூசாரியை கன்னத்தில் அறைந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
ராமநாதபுரம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 118 ஆவது ஜெயந்தி மற்றும் 63 ஆவது குரு பூஜை விழா நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று குரு பூஜை விழா நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை முதல், குடியரசு துணைத் தலைவர் சிபிஆர், முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சீமான், வைகோ உள்ளிட்டோர் தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த போது அங்கிருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த பூசாரியின் கன்னத்தில் அறைந்தார் ஸ்ரீதர் வாண்டையார். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
மேலும் ஸ்ரீதர் வாண்டையார் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் ஸ்ரீதர் வாண்டையாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து அவர் தர்ணா போராட்டத்தை விலக்கிக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.