நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தின் காரணமாகவே, மகளிர் உரிமைத் தொகை தொடர்பான புதிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை, நடப்பு மாதத்துடனே சேர்த்து வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒரு கோடியே 31 லட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளில் தலா 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுவதாகவும், அடுத்த 3 மாத உரிமைத் தொகையாக மூவாயிரம் ரூபாயும், கோடைக்கால சிறப்பு தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருப்பத்தூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.
" கோடைக்கால சிறப்பு தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி உரிமைத் தொகையை நிறுத்திவிடுவார்கள் என்கிறார். இது வடிகட்டிய பொய். நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் இந்த தொகை வழங்கப்பட்டதுதானே. இது போன்ற திட்டங்களைதேர்தல் நேரத்தில் நிறுத்துவது கிடையாது. தேர்தல் தோல்வியின் பயம் காரணமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
திமுக மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது. தோல்வி பயத்தின் காரணமாகத்தான் இதை அறிவித்துள்ளார்.
கோடைகால சிறப்பு தொகுப்பை அறிவித்திருக்கிறார். 2022, 2023, 2024, 2025 ஆகிய ஆண்டுகளிலும் கோடை காலம் வந்தது. அப்போது மக்களுக்குத் தெரியாத கோடைகாலத் துயரம், தேர்தல் நடைபெறுகின்ற இந்த 2026-ஆம் ஆண்டு மட்டும் முதலமைச்சர் ஸ்டாலினின் கண்ணுக்குத் தெரிவது எப்படி?
திமுக மக்களிடையே தனது செல்வாக்கை முழுமையாக இழந்துவிட்டது. தேர்தலை மட்டுமே மையமாக வைத்து இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. உரிமைத் தொகை பெறுகின்ற பெண்களின் கஷ்டங்களைப் பார்த்து இந்தத் தொகை வழங்கப்படவில்லை. தோல்வி பயத்தினால் எடுக்கப்பட்ட இந்த முயற்சி மக்கள் மத்தியில் எடுபடாது.
திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து 27 மாதம் தொடர்ச்சியாக நாங்கள் வலியுறுத்தி உரிமை தொகையை வழங்க வேண்டும் என்று சொன்னோம். 28 வது மாதத்தில் தான் இந்த உரிமை தொகையை கொடுக்கப்பட்டது.” என்று குற்றம்சாட்டியவரிடம் சேலத்தில் விஜய் பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “கரூர் பிரச்னைக்கு பிறகு விஜய் வீட்டை விட்டு வெளியவே வரவில்லை. தலைவர் என்றால் கேள்வி கேட்டால் சொல்லித்தான் ஆகவேண்டும். 15 நாள்கள் கட்சி அலுவலகத்தை மூடிவிட்டார். பிறகு எப்படி கட்சி நடத்தி மக்களுக்கு நல்லது செய்யப்போகிறார்கள்.” என்று விமர்சித்தார்.