Chief Minister M.K. Stalin addressing the media in Chennai on August 27, 2024.
விமான நிலையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பத்திரிகையாளர்களை சந்திதபோது

ரஜினி பேச்சு நகைச்சுவையா?: அமெரிக்கா செல்லும் முன் முதல்வர் சொன்னது என்ன?

Published on

“ரஜினி பேச்சை பகைச்சுவையாக எடுத்துக் கொள்ளக்கூடாது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க 17 நாள் அரசுப் பயணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு அமெரிக்கா கிளம்பினார். அதற்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

“உங்கள் வாழ்த்துகளுடன் அரசுப் பயணமாக நான் அமெரிக்கா செல்கிறேன். முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு பயணங்களை நான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். உலகத்தின் கவனத்தை தமிழகத்தை நோக்கி ஈர்க்க வெளிநாடு பயணங்கள் மிக முக்கியமானவை. வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டதால் தமிழ்நாட்டிற்கு பல்வேறு முதலீடுகள் வந்துள்ளன.

நாளை (இன்று) முதல் செப்டம்பர் 2ஆம் தேதி வரை அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோவிற்கு தொழில் முதலீட்டாளர்களை சந்திக்க செல்கிறேன்.

ரூ.990 கோடி முதலீட்டுக்கான 5 திட்டங்கள் தற்போது உற்பத்தியை மேற்கொண்டுள்ளன. ரூ.3,796 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கான பணிகள் முன்னேற்ற நிலையில் உள்ளன. 2030க்குள் முதலீடுகள் மூலம் ஒரு டிரில்லியன் பொருளாதார இலக்கை தமிழ்நாடு அடையும். அமெரிக்கா பயணம் வெற்றிக்கரமானதாக அமையும் என நம்புகிறேன்.

3 ஆண்டுகளில் ரூ.9.99 லட்சம் கோடி மதிப்பில் 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 18.89 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ள கல்வி நிதியை விடுவிக்க வேண்டும் என்றார்.

அமெரிக்கா பயணம் முடிந்தவுடன் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என்று செய்தியாளர் கேள்விக்கு, ”மாற்றம் ஒன்றே மாறாது வெய்ட் அண்ட் சி” என்று ஆங்கிலத்தில் பதில் அளித்தார்.

ரஜினி – துரைமுருகன் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதலமைச்சர், “அவர்கள் இருவரும் நீண்ட கால நண்பர்கள். இருவருமே சொல்லிவிட்டனர். அதை நீங்கள் சொன்னதுபோல நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, நீங்கள் பகைச்சுவையாக எடுத்துக் கொள்ளக்கூடாது.” என்றார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயணம் சிறக்க, அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com