இதே ஆளுநர் இருக்கட்டும்- மு.க.ஸ்டாலின் பேச்சு!

வழக்கறிஞர் புருசோத்தமன் மகள் பூர்ணிமா திருமண விழாவில் மு.க.ஸ்டாலின்
வழக்கறிஞர் புருசோத்தமன் மகள் பூர்ணிமா திருமண விழாவில் மு.க.ஸ்டாலின்
Published on

தமிழக அரசுக்கும் ஆளுநர் இரவிக்கும் அடிக்கடி மோதல் போக்கு உருவாகி அமிழ்ந்துவரும் நிலையில், முதலமைச்சரான ஸ்டாலின் சென்னையில் பங்கேற்ற திருமண விழாவில் இதே ஆளுநர் இருக்கட்டும் என்று பேசியுள்ளார்.

சென்னையில் வெள்ளியன்று காலையில் நடைபெற்ற தி.மு.க. வழக்கறிஞர் புருசோத்தமனின் மகளும் மாநகராட்சி மன்ற உறுப்பினருமான பூர்ணிமா- இராதாகிருஷ்ணன் திருமணத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைவகித்துப் பேசினார். அப்போது, மணமகளின் தந்தையின் கட்சிப் பணியைப் பற்றி குறிப்பிட்டு பாராட்டினார்.

” நம்முடைய வழக்கறிஞர் புருஷோத்தம் 1981-ஆம் ஆண்டு மாணவர் அமைப்பை ஏற்படுத்தி, அந்த மாணவர்களை எல்லாம் வைத்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, தலைவர் கலைஞர் அவர்களை அழைத்து வந்து, அவர் அடையக்கூடிய அளவுக்கு நடத்திக் காட்டியவர். 1991-இல் இருந்து உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கறிஞராகப் பொறுப்பேற்றார். அப்படி பொறுப்பேற்றிருந்த நேரத்தில்தான் வரலாற்றில் யாரும் மறந்திடாத ஒரு கொடுமையான செய்தி. அப்போது தமிழ்நாட்டில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி. இன்றைக்கு சென்னை மாநகரத்தில் நீங்கள் பார்க்கிறீர்கள். நான் சென்னை மாநகரத்தின் மேயராக இருந்தபோது, 10 மேம்பாலங்கள் கட்டினோம். இதுவரைக்கும் சென்னையைப் பொறுத்தவரைக்கும் மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கக்கூடிய எந்த மாநகரமாக இருந்தாலும், மேம்பாலங்கள் கட்டுவது என்பது மாநகராட்சியின் வேலையல்ல. அது பொதுப்பணித் துறைதான் கட்டவேண்டும். ஒன்றிய அரசாங்கம், மாநில அரசாங்கங்கள் தான் கட்டவேண்டும். நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் கட்டுவார்கள். மாநகராட்சி கட்டிய வரலாறே கிடையாது.

ஆனால் 1996-லிருந்து 2001 வரைக்கும், அதற்குப் பிறகு 2006-இல் இருந்து தொடர்ந்து நான் இந்த மாநகரத்தின் மேயராக இருந்தபோது 10 மேம்பாலங்களைப் போக்குவரத்தின் நெரிசலின் அடிப்படையில் கட்டவேண்டும் என்று முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டோம். வேகப்படுத்தினோம், விரைவுப்படுத்தினோம். அந்தப் பாலங்களைக் கட்டுவதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் நிர்ணயிக்கப்பட்டு, அந்தக் காலத்திற்குள் 10 பாலங்களையும் கட்டி முடிக்கவேண்டும் என்று முடிவெடுத்தோம். ஆனால் 10 பாலங்களில் ஒரு பாலம் பெரம்பூரில் இருக்கக்கூடிய மேம்பாலம். அதில் சிறிது டெக்னிக்கல் பிரச்சினை இருந்தது. அதனால், விரைவாக குறித்த நேரத்தில் கட்டுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் சிறிது தடைபட்டது. ஆனால் மீதம் இருக்கக்கூடிய 9 மேம்பாலங்களைக் குறித்த காலத்தில் மட்டுமல்ல, குறித்த காலத்திற்கு முன்பே கட்டிமுடித்த பெருமை நமக்குண்டு.

பாலத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்று ஒரு வழக்கு போட்டார்கள். ஜெயலலிதா அவர்கள் ஆட்சில் அந்த வழக்கு போட்டார்கள். இரவோடு இரவாக, தலைவர் கலைஞரைக் கைது செய்த கொடுமையை எல்லாம் பார்த்திருப்பீர்கள்.

கலைஞரைக் கைது செய்தபோது, அன்றைக்கு ஒரு பொதுநல வழக்காக நம்முடைய புருஷோத்தம் அவர்கள் தொடுத்தார். அந்த பொதுநல வழக்கை தொடுத்த காரணத்தினால்தான் அன்றைக்கு உயர்நீதிமன்ற நீதிபதி என்.கே. ஜெயின் அவர்கள் அதை விசாரித்து ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்கள் கைது செய்யப்பட்டதற்குக் கண்டனத்தைத் தெரிவித்து உடனடியாக விடுதலை செய்தார். இதுதான் புருசோத்தமனுக்கும், நம்முடைய இயக்கத்திற்கும், இயக்கத்தில் இருக்கக்கூடிய தலைவருக்கும் உள்ள வரலாறு.

அவருடைய திறமை, அதற்குப் பிறகு படிப்படியாக மாநில அரசு வழக்கறிஞராக நியமனம் பெற்றார். ஒன்றிய அரசின் மூத்த குழு வழக்கறிஞராவும் இரண்டு முறை பணியாற்றக்கூடிய வாய்ப்பைப் பெற்றார். கழகத்தின் சார்பில் நடத்தக்கூடிய எந்தப் போராட்டமாக இருந்தாலும், அதில் வழக்கறிஞர்கள் பங்கேற்கிறார்கள் என்று சொன்னால், அதில் அவரும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

இன்றைக்கு, அவருடைய மகள், அப்பாவுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறான் என்று சொல்வார்கள், அப்பாவுக்குப் பொண்ணு தப்பாமல் பிறந்திருக்கிறார். மணமகளாக வீற்றிருக்கக்கூடிய பூர்ணிமா அவர்கள் மாநகராட்சி மன்ற உறுப்பினராகவும், மாநகராட்சி மன்ற உறுப்பினராக மட்டுமல்ல, சுகாதார நிலைக்குழு உறுப்பினராக பொறுப்பேற்று அந்த கடமையும் சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

முதன்முதலாக திரு. ராஜீவ்காந்தி அவர்கள் 33 விழுக்காடு ஒதுக்கீட்டை பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் அடிப்படையில் வழங்கவேண்டும் என்று சொன்னபோது எந்த மாநிலமும் நிறைவேற்றுவதற்கு முன்வரவில்லை, முதல் மாநிலம் தமிழ்நாடுதான் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, நான் சென்னையின் மேயராக இருந்தபோது. இதுதான் திராவிட மாடல்.

இன்றைக்கு பெரிய பெரிய பதவில் உட்கார்ந்து கொண்டு, யார் யாரோ கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா? அந்த பதவி என்பதே வேஸ்ட். அதுவும் பெரிய பெரிய மாளிகையில் உட்கார்ந்து கொண்டு, திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்றால் என்ன? இப்போது நடந்து கொண்டிருக்கிற கல்யாணம் - இதுதான் திராவிடம். திராவிடம் என்றால் என்ன என்று கேட்க வைத்திருக்கிறதே, அதுதான் திராவிடம். திராவிடம் என்றால் என்ன? என்று கேட்கிறாரே அவரே தொடர்ந்து இருக்க வேண்டும். அது இன்னும் நம்முடைய பிரச்சாரத்திற்கு வலு சேர்த்துக்கொண்டே இருக்கிறது.

நான் இங்கே இருக்கக்கூடிய ஒன்றிய அரசில் இருக்கக்கூடிய பிரதமரை, உள்துறை அமைச்சராக இருக்கின்ற அமித் ஷா அவர்களைக் கேட்டுக்கொள்ள விரும்புவது, தயவுசெய்து இங்கே இருக்கக்கூடிய ஆளுநரை மட்டும் என்றைக்கும் மாற்றவேண்டாம். இந்த நாடாளுமன்றத் தேர்தல் வரைக்குமாவது இருக்கவேண்டும். அதில் எங்களுக்கு பல சௌகரியங்கள். எது வேண்டுமென்றாலும் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் இன்றைக்குப் பொதுமக்கள் யாரும் இதை பொருட்படுத்தவில்லை.” என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com