கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை
கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

‘கலைஞர் 100’- சிறப்பு மலரை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் மரியாதை செலுத்தினார்.

கருணாநிதியின் நூற்றாண்டு தமிழக அரசால் கடந்த ஓராண்டாக ‘கலைஞர்100’ எனும் பெயரில் மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. அதன் நிறைவாக, நேற்றுமுன்தினம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இன்று கருணாநிதியின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்களைத் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கலைஞர் நூற்றாண்டு விழா மலரையும் அவர் வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து "கலைஞர் நூற்றாண்டு நிறைவு நினைவலைகள்" என்ற பெயரில் சிறப்புப் புகைப்படக் காட்சியை திறந்து வைத்து, பார்வையிட்டார்.

இந்தப் படக் கண்காட்சியில் கலைஞரை நினைவுகூரும்வகையில் அவரது அரசியல், வாழ்க்கை நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், கலைஞரின் வரலாற்று நினைவுக் குறும்படத்தினையும் ஸ்டாலின் வெளியிட்டு பார்வையிட்டார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின், எம்.பி.கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களும் மரியாதை செலுத்தினர்.

அதனையடுத்து, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

பின்னர் கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்துக்குச் சென்று அங்குள்ள கருணாநிதியின் சிலைக்கும், பின்னர் அண்ணா அறிவாலயத்தில் உள்ள சிலைக்கும் மலர் மரியாதை செலுத்தினார்.

முன்னதாக, சென்னை கோபாலபுரம் இல்லத்தில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்கு முன்னர், அறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com