திருமாவளவன், சீமான், விஜய்
திருமாவளவன், சீமான், விஜய்

மாநில கட்சி அங்கீகாரம்: வி.சி.க. - நாம் தமிழர் கட்சிக்கு விஜய் வாழ்த்து!

மாநில கட்சிகளாக அங்கீகாரம் பெறவுள்ள வி.சி.க., நாம் தமிழர் கட்சிக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், சிதம்பரத்தில் போட்டியிட்ட திருமாவளவன் 1.03 லட்சம் வாக்குகள் மற்றும் விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் 70,703 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

இருதொகுதிகளிலும் தனி சின்னத்தில் போட்டியிட்டு வி.சி.க. வேட்பாளர்கள் வென்றனர் என்ற அடிப்படையில், வி.சி.க.வுக்கு மாநில கட்சியாக அங்கீகாரம் கிடைக்கவுள்ளது.

அதேபோல், 8.16 சதவீத வாக்குகளுடன் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை நாம் தமிழர் கட்சியும் பெறவிருக்கிறது. தொடக்கம் முதலே கூட்டணியின்றி தேர்தலை சந்தித்து வருகிறது. ஆனால், கடந்த தேர்தலில் அவர்களுக்கு பெரிதும் கை கொடுத்த கரும்பு விவசாயி சின்னம், இந்த தேர்தலில் கிடைக்கவில்லை. இருப்பினும் கிடைத்த மைக் சின்னத்தை வைத்து, தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார் சீமான்.

இதன் பலனாக கடந்த மக்களவை தேர்தலில் பெற்ற 3.90 வாக்கு சதவீதத்தைபோல இரண்டு மடங்குக்கும் அதிகமாக அதாவது 8.16 சதவீதம் வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றது. அடிப்படையில் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தையும் நா.த.க. பெறவிருக்கிறது.

வி.சி.க., நா.த.க. ஆகிய இரண்டு கட்சிகளும் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக த.வெ.க. ட்விட்டர் பக்கத்தில், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

logo
Andhimazhai
www.andhimazhai.com