மாநிலக் கட்சி அங்கீகாரம்: திருமாவளவன், சீமானுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

கமல்ஹாசன்
கமல்ஹாசன்
Published on

மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெற்றுள்ள வி.சி.க. நாம் தமிழர் கட்சிக்குத் மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“தேசம் என்றால் மக்கள். தேர்தலென்பது மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான களம். நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் என் அன்பிற்கினிய தம்பிகள் இருவர் படைத்திருக்கும் சாதனை எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமத்துவ சமுதாயம் படைக்க சமரசமின்றி போராடி வரும் தம்பி திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் வென்று மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்றுள்ளது. சிறுத்தைகளின் கால் நூற்றாண்டு கால தேர்தல் அரசியலில் இது ஒரு மைல் கல் சாதனை.

புதிய சின்னத்தோடு தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையிலும் தீரத்துடன் களம் கண்ட தம்பி சீமானின் நாம் தமிழர் கட்சி 8.19% வாக்குகளை எட்டிப் பிடித்து மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருப்பது தமிழக அரசியலில் புதிய திருப்புமுனை.

அரசியல் உங்களைத் தாக்கும் முன், உங்கள் தாக்கம் அரசியலில் இருக்கட்டுமென இளையோரை தொடர்ந்து வலியுறுத்துகிறவன் நான். ஜனநாயகம் வலுப்பெற அரசியலில் புதிய குரல்களும், இளைஞர்களின் பங்களிப்பும் அதிகரித்தே ஆகவேண்டும்.

மக்களின் நம்பிக்கையைப் பெற்று மாநிலக் கட்சி அங்கீகாரம் பெற்ற தம்பிகள் இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்.” என்று கமலின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

logo
Andhimazhai
www.andhimazhai.com