ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட்- உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தலைவர்கள் வரவேற்பு!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி இன்று தள்ளுபடி செய்தது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

விதிமீறல்கள் பல இருப்பதால்தான் அரசு மற்றும் உயர்நீதிமன்றம் உரிய முடிவு எடுத்துள்ளது என்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது மாநில அரசின் முக்கியமான வேலைகளில் ஒன்று என்றும் கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தனர்.

மேலும், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பாக கையாண்டதாக பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், ஸ்டெர்லைட் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்ததில் வரம்பு மீறல் இருந்ததாக கருதவில்லை என்றும் கூறியுள்ளனர்.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நமது அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலை நிர்வாகத்தின் அனைத்து விளக்கங்களும் நொறுங்கி, ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

நச்சு ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய மக்களுக்கும், நமது அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது!

எத்தகைய ஆபத்தில் இருந்தும் மக்களைக் காப்போம்!

கே. பாலகிருஷ்னன் - சி.பி.எம்.

ஆலையின் நச்சுக்கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டி நீரின்போக்கிற்கு தடையை ஏற்படுத்தியது. தற்போதைய வெள்ளத்தில் தூத்துக்குடி நகரம் பெரும் இழப்புகளைச் சந்தித்ததற்கு இந்த நச்சுக்கழிவுகள் நீர்வழித் தடங்களில் கொட்டப்பட்டதும் ஒரு முக்கியமான காரணம்.

எப்படியாவது ஆலையை திறந்து விட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வாக்குறுதிகளை ஸ்டெர்லைட் நிறுவனம் அளித்தது. தமிழ்நாடு அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உறுதியாகவும், திறமையாகவும் மக்கள் நலன் காக்கப்படும் என்ற நோக்கிலிருந்து வாதாடியதன் காரணமாக உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட முடியாது என தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு முழு மனதோடு வரவேற்கிறது.

வைகோ - ம.தி.மு.க.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு போராடிய மக்களின் போராட்டம் வெற்றி பெற்று உள்ளது. இது மறுமலர்ச்சி திமுக ஸ்டெர்லைட் ஆலையை மூட மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் 28 ஆண்டுகளாகப் போராடியதற்குக் கிடைத்த வெற்றி ஆகும். ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் போராடியபோது காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டு 13 அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு உச்ச நீதிமன்றத்தில் உரிய நீதி கிடைத்திருக்கிறது.                                       

ராமதாஸ் - பா.ம.க.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் முடிவு சரியானதே என்றும், ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com