நீட் துயரம் - சென்னை மாணவன், தந்தை அடுத்தடுத்து தற்கொலை

நீட் துயரம் - சென்னை மாணவன், தந்தை அடுத்தடுத்து தற்கொலை

நீட் தேர்வை இரண்டு முறை எழுதியும் அரசுக் கல்லூரியில் சேர்வதற்கான மதிப்பெண் எடுக்க முடியாத சென்னை மாணவன் நேற்று முன் தினம் தன்னை மாய்த்துக்கொண்டார். மகனின் இழப்பைத் தாங்கமுடியாத தந்தையும் நேற்று தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார்.

சென்னையை அடுத்த குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த மாணவர், ஜெகதீசுவரன். மத்திய கல்வி வாரியத்தில் பன்னிரண்டாம் வகுப்பில் 424 மதிப்பெண்களைப் பெற்ற இவர், இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வை எழுதினார். ஆனால், இவர் அரசுக் கல்லூரியில் சேர்வதற்கான அளவுக்கு மதிப்பெண் பெறவில்லை.

என்றாலும், மூன்றாவது முறையாக நீட் தேர்வை எழுதுவது என முடிவுசெய்து, பயிற்சி மையத்தில் சேர பணமும் கட்டினார். இதனிடையே ஜெகதீசுவரனுடன் படித்த மாணவர்கள் சிலர் பொறியியல் படிப்பிலும் 2 பேர் பணம் செலுத்தி தனியார் மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்தனர்.

தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் அளவுக்கு ஜெகதீசுவரன் மதிப்பெண் பெற்றுள்ளபோதும், 25 இலட்சம் ரூபாய் அளவுக்கு பணம் செலுத்தமுடியாத நிலையில், சக மாணவர்களைப் போல மருத்துவக் கல்லூரியில் சேர முடியவில்லை.

இந்த நிலையில் குரோம்பேட்டை குறிஞ்சி நகரில் உள்ள வீட்டில் மாணவன் வேட்டியில் தூக்கிட்டு, தன்னை மாயத்துக்கொண்டார். அவரின் இறப்பைத் தாங்கமுடியாத சோகத்தில், அவருடைய தந்தை செல்வசேகர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அந்தப் பகுதியே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com