
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் மூவர் போலீஸாரால் சுட்டுப் பிடிக்கப்பட்டனர்.
மதுரையைச் சேர்ந்தவர் 21 வயது இளம்பெண், கோவையில் விடுதியில் தங்கி தனியார் கலைக் கல்லூரியில் முதுநிலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த இருசக்கர வாகன உதிரிபாக விற்பனைக் கடை நடத்தி வரும் 25 வயது இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இருவரும் காரில் வெளியே சென்றுள்ளனர். பின்னர், கோவை விமான நிலையத்தின் பின்புறம் குடியிருப்புகள் இல்லாத பகுதியில் இரவு 11 மணியளவில் காருக்குள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த 3 பேர் காருக்குள் இருந்த இருவரையும் வெளியே வருமாறு மிரட்டியுள்ளனர். அந்தக் கும்பலின் நடவடிக்கையைக் கண்டு அச்சமடைந்த அவர்கள் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
இதையடுத்து, அந்தக் கும்பல் காரை தடுத்து நிறுத்தி அரிவாளால் கண்ணாடியை உடைத்து கதவைத் திறந்துள்ளனர். பின்னர், அந்த இளைஞரை தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டியுள்ளனர். பலத்த காயமடைந்த அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, அந்தப் பெண்ணை அருகில் உள்ள புதருக்குள் தூக்கிச் சென்று கத்தி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
நேற்று அதிகாலை 3 மணியளவில் மயக்கம் தெளிந்து எழுந்த அந்த இளைஞர், தனது கைப்பேசி மூலம் காவல் கட்டுப்பாட்டு அறையின் அவசர உதவி எண்ணான 100-ஐ தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், படுகாயங்களுடன் கிடந்த அந்த இளைஞரை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சுமார் ஒரு கி.மீ. தொலைவில் முள்புதர் பகுதியில் மாணவியை மீட்டு, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டு சென்றனர்.
மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட இடத்தில் இருசக்கர வாகனம் ஒன்று கிடந்தது. அதை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தியதில், அந்த வாகனம் கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவருடையது என்பது தெரியவந்தது. வாகனத்தை அந்த நபர்கள்தான் திருடிக்கொண்டு வந்தனரா என விசாரணை நடத்தப்பட்டது.
சம்பவ இடத்தில் காவல் துணை ஆணையர் தேவநாதன், உதவி ஆணையர் வேல்முருகன் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். இச்சம்பவம் குறித்து பீளமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அந்தப் பகுதியில் தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, தடயங்களை சேகரித்தனர். சம்பவம் நிகழ்ந்த பகுதியின் அருகில் குடியிருப்புகள் இல்லாததால் அங்கு சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லை. இருந்தபோதிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து, தொடர்புடைய நபர்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பிற்பகல் 2 மணிக்குப் பிறகு மாணவி தனியார் மருத்துவமனையில் இருந்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இது குறித்து அரசு மருத்துவமனை முதன்மையர் கீதாஞ்சலி கூறுகையில், மாணவியும், அந்த இளைஞரும் நல்ல நிலையில் உள்ளனர். இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
இந்நிலையில், சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் குணா தவசி, சதீஷ் கருப்பசாமி, கார்த்திக் காளீஸ்வரன் ஆகியோர் துடியலூர் அருகே பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு நேற்று நள்ளிரவு தகவல் கிடைத்தது. போலீஸார் அந்தப் பகுதிக்குச் சென்று அவர்களைப் பிடிக்க முயன்றனர்.
அவர்கள் மூன்று பேரும் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றனர். இதைத் தொடர்ந்து, மூன்று பேரின் கால்களிலும் போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். காயங்களுடன் அவர்கள் மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் ஆ.சரவண சுந்தர் தெரிவித்தார்.