கரூர் விவகாரத்தில் அமைச்சர்களுக்கு எதிரான தி.மு.க. மனு- உச்சநீதிமன்றம் தள்ளுபடி

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
Published on

கரூர் விவகாரம் தொடர்பாக தி.மு.க. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. 

கரூரில் கடந்த ஆட்சியில் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அதுகுறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்துவருகிறது.

இதனிடையில், கொல்லப்பட்டவர்களுக்கு ஏற்கெனவே 20 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது; அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க முதலமைச்சர் விஜய் கரூருக்கு வரும் 10ஆம் தேதி செல்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் ஆதவ் அர்ஜூனா முதலிய அமைச்சர்கள் வழக்கு தொடர்பாகப் பேசுவது விசாரணையைப் பாதிக்கும்படி இருப்பதாக தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி அளித்தார். உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார்.

அதன் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, தி.மு.க. தரப்பில் முதலமைச்சர் விஜய்யைக் குற்றம்சாட்டப்பட்டவர் எனக் குறிப்பிட்டதை நீதிபதி கண்டித்தார்.

வழக்கு விவரத்தைப் படிக்காமலேயே தி.மு.க. வழக்குரைஞர் பேசுவதா என அவர் கடிந்துகொண்டார்.

விஜய் கரூருக்குச் செல்லத் தடைவிதிக்கவும் அவர் மறுத்துவிட்டார்.

அமைச்சர்கள் பேசினால் நீங்களும் பேசிக்கொள்ளுங்கள் என்றும் உச்சநீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்றவேண்டாம் என்றும் குறிப்பிட்ட நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

தாங்களே திரும்பப் பெறுவதாக தி.மு.க. தரப்பு கூற, அதை ஏற்றுக்கொண்டார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com