
கவின் ஆணவக்கொலை வழக்கில், அவர் காதலித்த பெண்ணின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்தானதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த கவினும், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுபாஷினியும் காதலித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டு, ஜூலை 27ஆம் தேதி கவின் படுகொலை செய்யப்பட்டார்.
கொலையைச் செய்த சுபாஷினியின் இளைய சகோதரர் சுர்ஜித் கைது செய்யப்பட்டார். காவல்துறை உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சுபாஷினியின் பெற்றோர் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இவர்களின் உறவினர் ஜெயபால் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இவர்களின் குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளவாறு பெண்ணின் பெற்றோருக்கும், சகோதரர் சுா்ஜித்துக்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் சந்திப்புகளையோ, உரையாடல்களையோ நிரூபிக்க நேரடி சாட்சிகளோ தடயங்கலோ இல்லை என்று கூறி சரவணன், கிருஷ்ணகுமாரிக்கு எதிரான குற்றப்பத்திரிகையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது.
இந்த ரத்தை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, சந்திரசேகர் அமர்வு முன்பு, இந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது.
இந்நிலையில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், ஒரு கொலை வழக்கை எப்படிக் கையாளக்கூடாதோ அவ்வாறு கையாளப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.