பொன்முடி வகித்துவந்த உயர்கல்வி அமைச்சர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார், முனைவர் கோவி. செழியன். இவரது நியமனம் பொதுவான வரவேற்பைப் பெற்றதுடன் தற்கால அரசியல் சூழலை முன் வைத்து முதலமைச்சர் எடுத்த சிறந்த முடிவாகவும் சொல்லப்படுகிறது.
சிறந்த பேச்சாளரான இவரைப் பற்றி நமது அந்திமழை மார்ச் 2024 இதழில் ’மாறிவரும் பிரச்சார முகங்கள்’ எனும் பகுதியில் வெளியான செய்தி, இங்கே மீள்பதிவாக...!
தஞ்சை திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான முனைவர் கோவி.செழியன், பள்ளியிலேயே பேச்சாளராக மாறி, 1989ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் முதலில் பிரச்சாரக் கூட்டத்தில் மைக் பிடித்திருக்கிறார்.
மூன்றாவது முறை எம்.எல்.ஏ.வாக இருக்கும் செழியன், கடந்த பிப்ரவரி 16, 17, 18இல் நடைபெற்ற தி.மு.க.வின் மக்களவைப் பரப்புரைக் கூட்டத்தில் மூன்று இடங்களில் பேசும் அளவுக்கு முக்கியத்துவம் கொண்ட பேச்சாளர்.
1991 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தோற்றுப்போனபோது, சென்னை, கலைவாணர் அரங்கில் கவியரங்கத்தோடு அரங்கக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். அந்தக் கூட்டத்துக்குத் தலைமை செழியன். கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் பார்வையாளர்கள் வரிசையில்..!
“என் முறை வந்ததும், தலைவர் கலைஞரே நீங்கள் ராசியில்லாதவர், ஒரு துர்பாக்கியவாதி என்று பேசினேன். நீங்கள் பேராசிரியரை நண்பராகப் பெற்றிருக்கிறீர்கள், ஆனால் துர்பாக்கியவாதி; உங்களின் கருத்துகளைப் பேசும் 200 பேச்சாளர்களைப் பெற்றுள்ளீர்கள், ஆனால் துர்பாக்கியவாதி... என அடுக்கிக்கொண்டே போனேன். இவன் என்னடா இப்படி தலைவரை வைத்துக் கொண்டு எதிர்மறையாகப் பேசுகிறானே என டி.ஆர். பாலு உட்பட்டவர்கள் பயந்தநிலையில், நான் சொன்னேன், தலைவரே, நீங்கள் இவ்வளவெல்லாம் பெற்றிருந்தும், நிகரில்லாத அரசியல் எதிரியைப் பெறவில்லையே; இதனால்தான் துர்பாக்கியவாதி என்றேன். தலைவர் கூலிங் கிளாஸைக் கழற்றி, நெற்றிக் கோடுகள் தெரியப் பார்த்து, மறுநாள் அறிவாலயம் வரச் சொன்னார். நேரில் போனபோது, நன்றாகப் படி என உற்சாகப்படுத்தினார்.' என்பதை நெகிழ்ச்சியோடு கூறுகிறார் செழியன்