
சிப்காட், என்.எல்.சி. சுரங்கத்திற்கு கூடுதல் நிலங்களைக் கையகப்படுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
"கடலூர் மாவட்டத்தில் புதிய சிப்காட் வளாகம் அமைப்பதற்காக தியாகவல்லி குடிக்காடு பகுதிகளில் ஏற்கனவே அறிவிக்கை செய்யப்பட்ட 1097 ஏக்கருடன் மேலும் 164 ஏக்கர் நிலங்களையும், என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக கையகப்படுத்துவதற்கான அறிவிக்கையை அரசு வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே நிலப்பறிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்புகளால் ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் மீண்டும் சிப்காட் வளாகங்களையும், நிலக்கரி சுரங்கங்களையும் திணிப்பதும், நிலங்களைப் பறிப்பதும் கண்டிக்கத்தக்கவை.
கடலூரில் 2625 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் வளாகம் செயல்பட்டு வருகிறது. அதற்கு அருகிலேயே குடிக்காடு, தியாகவல்லி பகுதிகளில் 1119 ஏக்கரில் இன்னொரு சிப்காட் வளாகத்தை உருவாக்க 1097 ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்துவகான அரசாணையை கடந்த ஆண்டு தி.மு.க. அரசு பிறப்பித்தது.
இப்போது குடிக்காடு, தியாகவல்லி கிராமங்களில் மொத்தம் 164.20 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு கடந்த ஒன்றாம் தேதி வெளியிட்டுள்ளது.
இந்த நிலங்கள் அனைத்தும் பொதுமக்கள், விவசாயிகளிடமிருந்து கடந்த காலங்களில் இரு தனியார் பெரு நிறுவனங்களால் குறைந்த விலையில் பறிக்கப்பட்டவை ஆகும். அந்த நிலங்களை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், அவற்றை அரசே பறிக்கத் துடிப்பதை ஏற்க முடியாது.
புதிய அறிவிக்கையின் மூலம் கையகப்படுத்தப்படும் நிலங்களில் 75% பெரு நிறுவனங்களுக்கு சொந்தமானவை என்றாலும், இதன் மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1119 ஏக்கர் பரப்புடன் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 164.20 ஏக்கரையும் சேர்த்து, மொத்தம் 1.283 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் வளாகம் அமைக்கப்படவுள்ளதை த.வெ.க. அரசு உறுதி செய்துள்ளது.
1283 ஏக்கரில் புதிய சிப்காட் அமைக்கப்பட்டால் 3,968 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சிப்காட் வளாகம் கடலூரில் தான் செயல்படும். இது கடலூர் மாவட்டத்திற்கான வளர்ச்சி அல்ல.... மாறாக பேரழிவு ஆகும்.
அதேபோல், என்.எல்.சி நிறுவனத்தின் சுரங்கம் 1 விரிவாக்கத்திற்காக கங்கைகொண்டான் கிராமத்தில் 12.60 ஏக்கர் பரப்பளவிலான 68 துண்டு நிலங்களும், சுரங்கம் 1ஏ விரிவாக்கத்திற்காக வானதிராயபுரம் கிராமத்தில் 3.21 ஏக்கர் பரப்பளவிலான 77 துண்டு நிலங்களும் கையகப்படுத்தப்படும் என்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
இவை அனைத்தும் வீட்டுமனை நிலங்களாகும். இவை கையகப்படுத்தப்பட்டால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வதற்கு இடமில்லாத நிலை ஏற்படக்கூடும்.
கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள இரசாயன ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுகளால் நிலம், நீர், காற்று ஆகிய அனைத்தும் மாசுபடுகின்றன.
கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி நிலக்கரி சுரங்கங்களால் கடலூர் மாவட்டத்தில் உள்ள 30 லட்சம் மக்களும் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இத்தகைய சூழலில் மேலும் 1.283 ஏக்கரில் புதிய சிப்காட் வளாகம் அமைப்பட்டால் கடலூர் மாவட்டம் முழுவதும் நச்சுக்காடாக மாறிவிடும்.
குடிக்காடு, தியாகவல்லி உட்பட்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் வளம் மிகுந்தவை. அவற்றின் மூலம் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டப்படுகிறது. ஆனால். சில இடங்களில் அடிப்படையான வழிகாட்டி மதிப்பாக ஏக்கருக்கு ரூ.3.31 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு, அதனடிப்படையில் தான் இழப்பீடு கணக்கிடப்படுகிறது.
குடிக்காடு, தியாகவல்லி பகுதியில் உள்ள மக்களின் ஒற்றை ஆதாரம் விவசாயம் மட்டும் தான். இந்த நிலங்களை குறைந்த விலை கொடுத்து அரசு பறிப்பதன் மூலம் மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் சூறையாடுகிறது.
இவற்றையெல்லாம் பார்க்கும் போது தமிழ்நாட்டில் நடப்பது த.வெ.க. ஆட்சியா, தி.மு.க. அரசின் நீட்சியா? என்று தமிழ்நாட்டு மக்கள் ஐயம் எழுப்புகிறார்கள்.
தமிழ்நாட்டில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பது தான் உண்மை.
கடலூர் மாவட்டத்தில் புதிய சிப்காட் அமைக்கும் திட்டம். என்.எல்.சி சுரங்கம் 1. 1ஏ விரிவாக்கத் திட்டங்கள் ஆகியவற்றையும், அவற்றுக்காக மொத்தம் 1277 ஏக்கர் நிலங்களை கையகப் படுத்துவதற்கான அறிவிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்." என்று அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.