‘தலைவன் கொடி… தருமக் கொடி…’ தவெக கொடி, பாடல் அறிமுகம்!
சிவப்பு, மஞ்சள் நிறத்தில் இரண்டு யானைகள் நடுவே வாகை மலர் இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்து வைத்த விஜய், கட்சியின் பாடலையும் வெளியிட்டார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி, பாடலை அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் வெளியிடுவார் என கூறப்பட்டு இருந்தது.
அந்தவகையில், நடிகர் விஜய் நீலாங்கரையில் அமைந்திருக்கும் அவருடைய இல்லத்தில் இருந்து பனையூருக்குச் சென்றார். அவருடைய அம்மா ஷோபா, அப்பா சந்திரசேகர் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் குவிந்திருந்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் நடிகர் விஜய்க்கு தங்களின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில் கட்சிக் கொடியையும், கொடிப் பாடலையும் நடிகர் விஜய் துவங்கி வைத்தார். கொடியை அறிமுகம் செய்வதற்கு முன்பு அக்கட்சியினர் அனைவரும் உறுதிமொழியை ஏற்றனர்.
விஜய் வாசித்த உறுதிமொழி
நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.
நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன்.
மக்களாட்சி, மதச்சார்பின்மை. சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்.
சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு. சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று உளமார உறுதி கூறுகிறேன்.
கொடி - பாடல்
இதனைத் தொடர்ந்து, விஜய் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். சிவப்பு மஞ்சள் நிறத்தில், இரண்டு யானைகள் நடுவே வாகை மலர் இருக்கும் கொடியை நிர்வாகிகள் முன்னிலையில் ஏற்றி வைத்தவர் ‘தமிழன் கொடி பறக்குது’ என்ற பாடலை வெளியிட்டார். இந்த பாடல் விவேக் வரியில், தமன் இசையில் உருவாகியுள்ளது.
பின்னர் மேடையில் பேசிய விஜய், “இது எனக்கு சந்தோஷமான நாள். கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேதியை விரைவில் அறிவிப்பேன்.
இதுவரை நாம் நமக்காக உழைத்தோம். இனி தமிழ்நாட்டுக்காக உழைப்போம். நம் கொடிக்கான விளக்கத்தை விரைவில் அறிவிப்பேன்.” என்றார்.