ஆம்ஸ்ட்ராங்க் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் மாயாவதி
ஆம்ஸ்ட்ராங்க் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் மாயாவதி

அனுமதி மறுத்த நீதிமன்றம்: அஞ்சலி செலுத்திய மாயாவதி !

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி மாநில அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி தரப்பில் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனு தொடர்பாக மாநகராட்சி ஆணையர், எந்த பதிலும் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து, இந்த கோரிக்கை தொடர்பாக அவசரமாக விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பொற்கொடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது.

அதன்படி, இந்த மனுவை தனி நீதிபதி ஒருவர் விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இதன்படி இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கட்சி அலுவலகம் அமைந்துள்ள இடம் நெரிசல் மிகுந்த பகுதி எனக்கூறி வரை படங்களை அரசு சமர்பித்தது.

இதற்கு மனுதாரர் தரப்பில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய மாநகராட்சி அனுமதி அளித்ததாக வாதிடப்பட்டது.

இதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், "தே.மு.தி.க. அலுவலகம் 27,000 சதுர அடி கொண்ட பரந்த இடம். பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் இருக்கும் இடம், மக்கள் நெருக்கடி அதிகமுள்ள இடம். அதனால்தான் அனுமதி மறுக்கப்பட்டது. கட்சி அலுவலகம் அமைந்துள்ள இடம் நெருக்கடி நிறைந்த பகுதி. வீட்டில் இருந்து 1.5 கிமீ தூரத்தில் 2,000 சதுர அடியில் மாநகராட்சி ஒரு இடத்தை தேர்வு செய்துள்ளது. அங்கு அடக்கம் செய்யலாம்" என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து நடந்த வழக்கு விசாரணையின் போது, மயானம் என அறிவிக்கப்பட்ட இடத்தில் தான் உடல் அடக்கம் செய்ய முடியும். ஆம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும் சட்ட விதிகளை மீற முடியாது. தற்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்துவிட்டு, வேறு இடத்தில் மணிமண்டபம் கட்டிக் கொள்ளலாம்.

தற்போதைக்கு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடாது. நாளை வீர வணக்கம் போன்ற நிகழ்வின் போது ஆயிரக்கணக்கான மக்கள் வந்தால் என்ன செய்வது. ஹத்ராஸ் சம்பவத்தை பார்த்தீர்களா? வேறு பெரிய சாலை, விசாலமான இடம் இருந்தால் சொல்லுங்கள், அதன்பிறகு உத்தரவு பிறப்பிக்கிறேன்" என்று நீதிபதி பவானி சுப்புராயன் தெரிவித்தார்.

மீண்டும் இந்த வழக்கு விசாரணை இன்னும் சற்றுநேரத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரும், உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான இன்று காலை 9.30 மணியளவில் உத்தரப்பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் பெரம்பூருக்கு மாயாவாதி சென்றார். பின்னர் அங்குள்ள மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டு இருந்த ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாயாவதி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கு இருந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் பேசிய அவர், ”புத்தர் காட்டிய மனிதாபிமானப் பாதையில் பயணித்தவர் ஆம்ஸ்ட்ராங். அவர் அவரது வீட்டுக்கு அருகேயே படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அந்தத் துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனைடைந்தேன். இது தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டிருப்பதையே காட்டுகிறது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இத்தருணத்தில், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு தமிழக அரசு பாதுகாப்பு தர வேண்டும்.

இந்தக் கொலை தொடர்பாக கைதானவர்கள் உண்மைக் குற்றவாளிகள் அல்ல என்ற தகவல் கிடைத்துள்ளது. எனவே, இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை. சட்டம் தன் கடமையை செய்யட்டும்.

கட்சியினர் யாரும் சட்டம், ஒழுங்கை கையில் எடுக்க வேண்டாம் என வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாட்டில் பட்டியலின மக்களின் நலன் காக்கப்பட வேண்டும். அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சி என்றும் உறுதுணையாக இருக்கும்.” என்று கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com