சோமன்னா
சோமன்னா

கர்நாடகக்காரருக்கு நீர்வள அமைச்சர் பதவியா? – தமிழக காங்கிரஸ் எதிர்ப்பு

தமிழ்நாடு - கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பிரச்சினை தீராத நிலையில், நீர்வளத்துறையின் இணையமைச்சராக சோமன்னா நியமிக்கப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் என தமிழக காங்கிரஸ் பொதுக்கூழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழுக் கூட்டம் காமராஜர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது. மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் டாக்டர் அஜோய்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்ல பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் முக்கியமாக நீர்வளத்துறை, ரயில்வே துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சோமன்னாவை பதவியிலிருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த தீர்மானம் பின்வருமாறு:

நரேந்திர மோடி தலைமையில் அமைந்த அமைச்சரவையில் நீர்வளம், ரயில்வே துறை இணையமைச்சராக வி. சோமன்னா பதவியேற்றிருப்பது காவிரி உள்ளிட்ட நதிநீர் பிரச்சினைகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று இக்கூட்டம் கருதுகிறது. தமிழ்நாட்டின் உரிமைகளை தொடர்ந்து பறித்து வருகிற கர்நாடகத்தைச் சேர்ந்த வி. சோமன்னாவை நீர்வளத்துறைப் பொறுப்பிலிருந்து உடனடியாக விடுவிக்க வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு போன்ற நதிநீர் பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன. இதை மீட்பதற்காக நடுவர் மன்றத்தையும், உச்சநீதிமன்றத்தையும் மற்றும் காவிரி ஒழுங்காற்று ஆணையத்தையும் நாட வேண்டிய நிலை உள்ளது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் அருகே உள்ள பெருகுடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. அமராவதி அணையின் நீர் ஆதாரமாக சிலந்தை ஆறு உள்ளது. சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்குத் தண்ணீர் வரத்து முழுவதும் குறைந்து விடும். இதனால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 55,000 ஏக்கரில் விவசாயம் பாதிக்கப்படுகிற அபாயம் இருப்பதாகக் கூறி தடுப்பணை கட்டுவதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உருவாகியிருக்கிறது. இதன் காரணமாக சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் விவசாயிகள் வழக்கு தொடுத்தனர். அப்போது சிலந்தை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தேசிய வனவிலங்குகள் வாரியத்திடம் கேரள அரசு உரிய அனுமதியைப் பெறாமல் தடுப்பணையைக் கட்டக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இந்த ஆணையை நிறைவேற்றுகிற வகையில் உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கு தமிழக அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. அதேபோல, முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டவும், பழைய அணையை இடிக்கவும் ஒன்றிய அரசிடம் கேரள அரசு அனுமதி கோரியிருப்பதாக வந்திருக்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அமைத்த வல்லுநர் குழு அணை பாதுகாப்பாக இருப்பதாக அறிக்கை சமர்ப்பித்தது. இந்நிலையில் புதிய அணை கட்டுகிற முயற்சியை தடுக்கிற வகையில் தமிழக அரசு நீதிமன்றத்தின் மூலம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இப்பொதுக்குழு கூட்டம் கேட்டுக் கொள்கிறது.” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com