
தமிழக பொறுப்பு டிஜிபியாக பதவி வகித்து வந்த வெங்கடராமன் (58) மருத்துவ விடுப்பில் சென்று இருக்கும் நிலையில், தற்காலிக பொறுப்பு டிஜிபியாக அபய் குமார் சிங் பதவி வகிப்பார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜுவால் ஓய்வு பெற்ற பின்னர் பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று அவருக்கு சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்பட்டு கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று, பின்னர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.
எனவே வெங்கடராமன் டிசம்பர் 9ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை மருத்துவ விடுப்பில் சென்று இருக்கிறார்.
இதனால் அவர் வகித்த பொறுப்பை அவருக்குப் பதிலாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை டிஜிபியாக உள்ள அபய் குமார் சிங் கவனிப்பார் என தமிழக அரசு இன்று (டிசம்பர் 10) வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.