தமிழக அரசு அனுப்பிய சட்டத் திருத்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அனுப்பிய விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல், அதனை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அனுப்பியுள்ளார். ஆளுநரின் இந்தச் செயலை சட்ட விரோதமானது என்று குற்றம் சாட்டிய தமிழக அரசு, அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழக சட்டத் திருத்த மசோதா, கடந்த ஏப்ரல் மாதத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என். ரவியின் ஒப்புதலுக்காக அவருக்கு அனுப்பப்பட்டது.
வழக்கமான நடைமுறையின்படி, மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது விளக்கத்துக்காக திருப்பி அனுப்ப வேண்டும். ஆனால், அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆளுநரின் இந்தச் செயல், அரசியல் சட்டப் பிரிவு 200-ஐ மீறுகிறது. மாநில அரசின் சட்டத் தீர்மானங்களை மாற்ற ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. எனவே, ஆளுநரின் நடவடிக்கையை செல்லாததாக உச்ச நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியுள்ளது.
குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிய மசோதாவானது, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமிக்கவும், பதவிநீக்கம் செய்யவும் தமிழக அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. மேலும், இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி குழுவில் நிதித்துறைச் செயலாளரை உறுப்பினர்களில் ஒருவராக நியமிப்பதற்கு ஏதுவாக திருத்தம் செய்யப்பட்டது.